திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் டிரைவர் பலி: காதலியை பார்க்க வந்தவருக்கு குடிபோதையால் நேர்ந்த பரிதாபம்

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஈகாட்டூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்துகுமார்(36). நேற்று அதிகாலை 2.30 மணியளவில், இவரது வீட்டின் முன்பு வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்துள்ளார். அவரை அழைத்தபோது அந்த வாலிபர், பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து நடந்து சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த முத்துகுமார், திருடன், திருடன் என சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டுள்ளனர். அவர்கள்  வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர், போதையில் இருந்ததால் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. இதனையடுத்து, அவரை திருடன் என கருதிய அப்பகுதி மக்கள், சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வந்த பள்ளிபாளையம் போலீசார், மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்த வாலிபர், திருச்செங்கோடு அருகே வட்டூரை சேர்ந்த கந்தசாமி மகன் தர்மராஜ்(27) என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில்,மினிவேன் டிரைவராக பணியாற்றி வந்த தர்மராஜுக்கு ஈகாட்டூரை சேர்ந்த இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில், தர்மராஜை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த பெண், தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்து விட்டதாகவும், தன்னை அடிப்பதாகவும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, காதலியை மீட்பதற்காக ஈகாட்டூருக்கு அதிகாலையில் தர்மராஜ் வந்துள்ளார். ஆனால், அவர் போதையில் இருந்ததால், காதலியின் வீடு தெரியாமல் முத்துகுமாரின் வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது, அவர் திருட வந்ததாக கருதி, அப்பகுதியினர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரை தாக்கியதாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: