கடை மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து 14 சவரன், 32 ஆயிரம், 70 செல்போன் கொள்ளை

சென்னை: பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் மேகநாதன் (50). வீட்டின் அருகே மளிகைக்கடை நடத்துகிறார். தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக  குடும்பத்துடன் சொந்த ஊரான பாபநாசம் சென்றனர். நேற்று காலை வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் கடையில் இருந்து சிகரெட்டுகள் திருடுபோனது தெரிய வந்தது. வீட்டில் 50 சவரன் நகையை  பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்ததால் தப்பியது.

* பள்ளிக்கரணை பெரியார்நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (30). அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 70 செல்போன்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது.  

* திருவொற்றியூர், ஜோதிநகர் 4வது தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (38). தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில், இவர் கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்றிருந்தார். பின்னர், அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது, தனது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து பழனிவேல் அதிர்ச்சியானார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 14 சவரன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

*  திருவல்லிக்கேணியில் இருந்து  திருவொற்றியூர் நோக்கி மாநகர பேருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட  பயணிகள் இருந்தனர். ராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பஸ்சுக்குள் இருந்த வாலிபர் பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துள்ளார். இதைப்பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனே அந்த வாலிபரை அனைவரும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ராயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (25) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

* அபிராமபுரம் பட்டுடையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் தலைமை செயலகத்தில் செய்தி துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தலைமை செயலகத்திற்கு வந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மெரினா காமராஜர் சாலையில் வரும் போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியதில், ரமேஷூக்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது.

* அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் பகுதியில் நேற்று காலை ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சளிம் குழந்தையை மீட்டு போரூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர், ராஜா தெருவை சேர்ந்த சந்தானம் (61) மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ரூ.52 லட்சம் மோசடி: பெண்ணுக்கு வலை

அம்பத்தூர், மேனாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி உமா (42). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூரைச் சேர்ந்த பத்மினி (எ) ஷீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, பத்மினி உமாவிடம் வெளிநாட்டில்  வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.52 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். புகாரின்பேரில், அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மினியை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: