கடலூர் அருகே தண்டவாளத்தில் கிளிப்புகளை கழற்றி ரயிலை கவிழ்க்க முயன்ற ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கைது: அதிகாரிகளை பழி வாங்க சதி செயலில் ஈடுபட்டதாக பகீர் தகவல்

சேலம்: கடலூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிளிப்புகளை கழற்றி, பாசஞ்சர் ரயிலை கவிழ்க்க முயன்றதாக 3 ரயில்வே ஊழியர்களை சேலம் போலீசார் கைது செய்தனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி என்னுமிடத்தில் கடந்த 19ம்தேதி தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகளில் மாட்டப்பட்டிருந்த கிளிப்புகளை (இஆர்சி கிளிப்) மர்ம நபர்கள் கழற்றி வீசியிருந்தனர். அந்த வழியே அன்று பிற்பகல் 3 மணியளவில் விருத்தாச்சலம்-சேலம் பாசஞ்சர் ரயில் சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் அதிர்வு அதிகளவு இருந்ததால் சந்தேகம் கொண்ட லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். பின்னர் அவர் கீழே இறங்கிச்சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிளிப்புகள் கழற்றப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி சேலம் கோட்ட அதிகாரிகளுக்கும், சின்னசேலம் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மீண்டும் கிளிப்புகளை பொருத்தி சரிசெய்தனர். அதன்பின் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு சேலம் வந்தது. இதுகுறித்து சின்னசேலம் பகுதி ரயில்வே முதுநிலை பொறியாளர் தமிழ்வளவன், அளித்த புகாரின்பேரில் சேலம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் இருந்த கிளிப்புகளை கழற்றி வீசியது, அந்த பகுதியில் பணியாற்றும் ரயில்வே கேங் மேன்களான மகேந்திரன்(36), மணிவேல்(32), ரகுராமன்(40) எனத்தெரியவந்தது. அந்த 3 பேரையும் நேற்று கைது செய்து, சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தொடர்ந்து பணி வழங்கி வரும் ரயில்வே அதிகாரிகளை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் தண்டவாள கிளிப்புகளை கழற்றியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைதான 3 பேரையும் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதிகாரிகளை பழிவாங்க ரயிலை கவிழ்க்கும் செயலில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பது கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. துறை ரீதியான விசாரணையை பொறியியல் பிரிவு மேற்கொண்டுள்ளது. தற்போது கைதான 3 ரயில்வே ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: