×

தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுத்தொல்லை செம்பாக்கத்தில் பலர் டெங்குவால் பாதிப்பு: சுகாதார பணிகளில் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் பீதி

தாம்பரம்: செம்பாக்கம் நகராட்சி பகுதி தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார பணிகள் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். தாம்பரம் அடுத்த செம்பாக்கம், அனுமன் நகர், அன்னை தெரசா தெரு மற்றும் திருமலை நகர், 7வது தெரு ஆகிய பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து செல்லும் கழிவுநீர் செல்ல முறையான வழி இல்லாதததால் கழிவுநீர் அனைத்தும் அப்பகுதியில் உள்ள கௌரிவாக்கம் ஏரியில் சென்று கலக்கிறது. மேலும், தெருக்களிலும் தேங்கி நிற்பதால், அப்பகுதி முழுவதும் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில், செம்பாக்கம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட அனுமன் நகர், அன்னை தெரசா தெரு, திருமலை நகர் 7வது தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்ல முறையான வழி இல்லை. இதனால் கழிவுநீர் தெருக்களிலேயே தேங்கி நிற்கிறது. மேலும், இப்பகுதியில் உள்ள ஏரியில் கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும், இப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைகளை சரிவர எடுத்துச்செல்லாததால் குப்பைகழிவுகள் அதிகரித்து வருவதோடு பெரும்பாலான குப்பை கழிவுகள் ஏரியில் கலந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அனைவரும் கடுமையான கொசுத்தொல்லையினால் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

கொசுதொல்லையால் இப்பகுதியை சேர்ந்த அனிதா சாந்தலிங்கம் (50) என்ற பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகள் ஹரிணி (7) என்பவருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், மேலும் சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக செம்பாக்கம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜ் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் சார்பில் புகார் அளித்தால் அதை காதில் கூட வாங்கிக்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளார்.

எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், குப்பைகளை சரியாக தினமும் அகற்றவும், காய்ச்சலில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மூலம் காய்ச்சல் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : streets , Due,stagnant water,discharge,streets,dengue,People,scared,authorities' negligence,health care
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...