அமலாபால் துணிச்சல் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும்: விஷால், நடிகர், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்) என 3 அமைப்புகளில் இருந்து தலா 3 பேரை கொண்ட கமிட்டி ஒன்றை அமைக்க இருக்கிறோம். திரையுலக பெண்களுக்கு, குறிப்பாக புதிதாக திரையுலகில் நுழையும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் தீர்வு காணவே இந்த கமிட்டி அமைக்கப்படுகிறது. ஏதாவது புகார் இருந்தாலோ தவறு நடக்கிறது என தெரிந்தாலோ அது குறித்து உடனடியாக கமிட்டிக்கு தெரிவித்தால் அப்போதே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கமிட்டியில் முழுக்க பெண்களே இருப்பார்கள். குஷ்பு, ரோகிணி உள்பட முக்கியமான திரையுலக பெண்கள் கமிட்டியை வழி நடத்தி செல்வார்கள். பாலியல் விஷயத்தில், பல ஆண்டுக்கு பிறகு சொல்லும்போது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் வரலாம். நாங்கள் கேட்டுக்கொள்வது ஒரு தவறு நடக்கும்போதே அதை உடனடியாக தெரியப்படுத்துங்கள் என்பதுதான். அப்படி தெரிவிக்கும்போது அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சில மாதங்களுக்கு முன் அமலாபால் நடன பயிற்சிக்காக சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது ஒருவர் அவரிடம் தவறாக நடந்து கொண்ட விஷயத்தை உடனடியாக எங்களிடம் போனில் தெரிவித்தார். உடனே போலீசில் புகார் அளித்து, அந்த நபரை பிடித்து கொடுத்தோம். அமலாபால் துணிச்சல் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும். அப்போதுதான் தவறு நடக்காமல் தடுக்க முடியும். செல்வாக்குமிக்கவர், பலம் வாய்ந்தவர் என்றெல்லாம் அஞ்சத் தேவையில்லை. நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் திரையுலக பெண்களுக்கு நாங்கள் தெரியப்படுத்த விரும்புவது. அதே சமயம், யார் வேண்டுமென்றாலும் யார் மீது தவறான புகார் கொடுக்கலாம் என்ற சூழலும் இருக்கிறது. விஷால் என் கையை பிடித்து இழுத்தார் என்று கூட யாராவது பொய்யாக சொல்லலாம். இது ஆபத்தான டிரெண்டாகவும் உள்ளது. அதனால் புகார்கள் மீது மிகவும் கவனமாக விசாரணை நடத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.

 கமிட்டியை வரும் வாரத்தில் அமைத்துவிடுவோம். அதற்கு முன்பாகவே நடிகர் சங்கத்தில் இதுபோன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் வழங்கவும் துரிதமாக செயல்பட்டு வருகிறோம். சமீபத்தில் கூட சின்னத்திரையை சேர்ந்த நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தேவையான கவுன்சலிங் கொடுத்து அவரை அந்த சூழலில் இருந்து மீட்டுள்ளோம். இப்போது அவர் மீண்டும் நல்லபடியாக நடித்து வருகிறார். அதுபோல் பல விவகாரங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் உறுப்பினர்களான ரோகிணி உள்பட பலரும் பல பேருக்கு இதுபோல் உதவி வருகின்றனர். இப்போது பாதுகாப்பு கமிட்டி அமைத்ததும் அதன் விதிமுறைகள் வகுக்கப்படும். ஒருவர் மீது புகார் கூறப்பட்டால் அதற்கான விசாரணை நடத்தப்பட்டு, அந்த புகார் உறுதியான பிறகு புகாரில் சிக்கியவரை படங்களிலிருந்து நீக்குவது உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நான் புகார் கூறினால் எனது சினிமா வாழ்க்கை போய்விடும் என்ற எண்ணமே யாருக்கும் வரக்கூடாது. அதை மனதில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் நான் சொல்ல விரும்புவது, குற்றத்தை மறைப்பதும் குற்றம்தான். எனவே தைரியமாக முன்வந்து அது பற்றி சொல்லுங்கள்.

அமலாபால் துணிச்சல் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும். அப்போதுதான் தவறு நடக்காமல் தடுக்க முடியும். செல்வாக்குமிக்கவர், பலம் வாய்ந்தவர் என்றெல்லாம் அஞ்சத் தேவையில்லை. நாங்கள் இருக்கிறோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: