பயணிகள் வருகை இல்லாததால் பெரும் நஷ்டம் மெட்ரோ ரயில் நிலைய உணவகங்கள் மூடல்

* தொடங்கிய சில நாட்களிலேயே இழுத்து மூடப்பட்ட அவலம்

* கட்டணத்தை குறைக்க நிர்வாகம் முன்வருமா?

சென்னை: போதிய பயணிகள் வருகை இல்லாததால் அண்ணாநகர் கோபுரம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தனியார் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாற்று போக்குவரத்தாக மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி பணிகளை தொடங்கினார். பின்னர், மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டுக்கு சென்று அவர்களுடன் ஒப்பந்தம் போட்டு மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுத்து பணிகளை விரைவாக நடத்தினர்.

பணிகள் நடந்து கொண்டே இருக்கும்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சியில் பணிகள் முடிந்தது. இதையடுத்து, கோயம்பேடு-ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் சேவையை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆலந்தூர்-விமான நிலையம், சென்ட்ரல்-நேரு பூங்கா, டிஎம்எஸ்-விமான நிலையம் என 4 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பல்வேறு சிறப்பு பாதுகாப்பு வசதி, வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் தானியங்கி கதவுகள் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட்டன. சென்னையில் மாற்று போக்குவரத்தாக உருவெடுக்கும் என கருதப்பட்ட மெட்ரோ ரயில் பக்கம் செல்ல மக்கள் அச்சப்பட்டனர். காரணம், இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் மற்றும் அடிக்கடி சுரங்கப்பாதையிலும் உயர் மட்ட பாதையிலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நடுவழியில் ரயில் நின்றதுதான். பாதுகாப்பான சேவை என்று அழைக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவையில் கடந்த 2 மாதங்களில் 5 முறை திடீர் பிரச்னைகள் ஏற்பட்டு, சேவை தடைபட்டது மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானதா என்ற அச்சம் பயணிகள் மத்தியில் உருவாகியுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போதைய நிலையில் தினம்தோறும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வசதிக்காகவும், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் வருவாயை பெருக்கும் வகையிலும் 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவகங்கள் அமைக்க தனியார் உணவக நிறுவனங்களுடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் போட்டது. அதன்படி, பல மெட்ரோ ரயில் நிலையங்களில் தனியார் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு வகையான உணவுகள் விற்கப்படுகிறது. இந்நிலையில், அண்ணாநகர் கோபுரம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் திறக்கப்பட்ட உணவகங்கள் பெரும் நஷ்டத்தால் இழுத்து மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘மெட்ரோ ரயிலில் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் வார விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் குறைவான அளவே சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சென்ட்ரல்-தேனாம்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில்தான் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மற்ற நிலையங்களை குறைந்த அளவு மக்களே பயன்படுத்துகின்றனர். மேலும், டிக்கெட் விலைதான் அதிகம் என்றுபார்த்தால், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் சாப்பாடு விலையும் அதிகம்தான். இதற்கு காரணம் மெட்ரோ ரயில் நிர்வாகம் பெரும் தொகை பெற்று ஒப்பந்தம் போடப்பட்டதுதான்.

அண்ணாநகர் கோபுரம் மற்றும் திருமங்கலம் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதால், உணவகங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு போதிய வருமானம் இல்லை. இதனால், இரு ரயில் நிலையங்களில் இருந்த உணவகங்கள் எந்த அறிவிப்புமின்றி திடீரென இழுத்து மூடப்பட்டது. புதிதாக திறக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் இந்த உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. வருவாயை பெருக்கும் நோக்கத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த உணவகங்கள் மூடப்பட்டது மெட்ரோ ரயில் நிர்வாகம் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலை சென்றால், சில ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவையே மூடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பல்வேறு தரப்பில் இருந்தும் டிக்கெட் விலையை குறைக்க வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் நிர்வாகம் விலையை குறைக்க முன்வரவில்லை.பேச்சுவார்த்தைக்கும் கூட வரவில்லை. தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் டிக்கெட் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் குறைந்த அளவே வசூலிக்கப்படுகின்றனர். ஆனால், சென்னையில் மட்டும் தான் இவ்வளவு அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்தான் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்பட வேண்டும். ஆனால், இந்த சேவையை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. எனவே, உணவகங்கள் மூடப்படுவதை தவிர்க்கவும், பொதுமக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் டிக்கெட் விலை மற்றும் உணவகங்கள் விலையை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: