ரஷ்யாவுடன் 1987ல் செய்து கொண்ட ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அதிபர் டிரம்ப் உறுதி

வாஷிங்டன்: ‘‘ஆயுதங்களை கட்டுப்படுத்துவதற்காக ரஷ்யாவுடன் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ஐஎன்எப் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்’’ என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆயுத உற்பத்தி மற்றும் சோதனைகளை கட்டுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனும், சோவியத் ரஷ்யா அதிபராக இருந்த மிக்கேல் கோர்பசேவும் கடந்த 1987ம் ஆண்டு, ஐஎன்எப் (நடுத்தர ரக அணு ஆயுதங்கள் கட்டுப்பாடு) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் 300 மைல் முதல் 3,400 மைல் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை வைத்திருக்கக் கூடாது, உற்பத்தியும் செய்யக் கூடாது மற்றும் பரிசோதனையும் செய்யக் கூடாது. இந்த ஒப்பந்தம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் காலாவதியாக உள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி ரஷ்யா ‘நோவாடர்’ என்ற ஏவுகணைகளை உற்பத்தி செய்யவுள்ளது. அதனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவின் நெவடா மாநிலத்தில் நேற்று பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘‘ஆயுத கட்டுப்பாடு குறித்த புதிய ஒப்பந்தத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ஐஎன்எப் ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் வெளியேறுவோம். ஆயுதங்களை நாங்களும் தயாரிக்க போகிறோம். ரஷ்யாவும், சீனாவும் ஏவுகணைகளை தயாரிக்கும்போது, நாங்கள் மட்டும் ஐஎன்எப் ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா அமைதியாக இருந்தது எனக்கு தெரியாது’’ என்றார். அமெரிக்காவின் இந்த முடிவு, மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தத்தில் சீனாவுடன் அமெரிக்கா மோதி வருவது குறிப்பிடத்தக்கது.

‘ஆபத்தான முடிவு’

ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக முடிவு செய்துள்ளது பற்றி ரஷ்யாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கய் ரியாப்கவ் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், “இது மிகவும் ஆபத்தான முடிவு. சர்வதேச நாடுகளால் இதை புரிந்து கொள்ள முடியாது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இந்த முடிவுக்கு கடுமையான கண்டனங்கள் எழும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: