×

தொடர்ந்து நீடிக்கும் பதற்றம் சபரிமலையில் 4 ஆந்திர பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தம்: போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 17ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது முதல் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆந்திராவை சேர்ந்த மாதவி, டெல்லியை சேர்ந்த பெண் நிருபர் சுகாசினி ராஜ், ஐதராபாத்தை சேர்ந்த தனியார் டிவி பெண் நிருபர் கவிதா, எர்ணாகுளத்தை சேர்ந்த மாடல் அழகி ரெஹ்னா பாத்திமா, திருவனந்தபுரத்தை சேர்ந்த மேரி ஸ்வீட்டி, கொல்லத்தை சேர்ந்த மஞ்சு ஜோசப் ஆகியோர் சபரிமலை தரிசனத்திற்கு செல்ல முயற்சித்தனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.

நேற்றும் சபரிமலைக்கு இளம்பெண்கள் வருவார்கள் என தகவல் வெளியானதையடுத்து நிலைக்கல் முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஏடிஜிபி அனில்காந்த், ஐஜிக்கள் ஸ்ரீஜித், மனோஜ் ஆபிரகாம் மற்றும் 5 எஸ்பிக்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் சபரிமலைக்கு நேற்று காலை 10.15 மணியளவில் 2 பெண்கள் வந்தனர். இருவருக்கும் 42 வயதுக்குள்தான் இருக்கும். இவர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தரிசனத்திற்காக புறப்பட்டனர்.

இதை பார்த்த பக்தர்கள் அவர்களை முற்றுகையிட்டு சரண கோஷம் எழுப்பினர். சிறிது நேரத்திலேயே அங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.
இதையடுத்து போலீசாரும் அங்கு விரைந்தனர். பக்தர்களின் எதிர்ப்பால் பயந்து போன அவர்கள் உடனடியாக அங்கிருந்து திரும்பி சென்றனர். விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த வாசந்தி, ஆதிசேஷம்மா என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்ல எதிர்ப்பு இருப்பது தெரியாமல் வந்ததாகவும், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பி செல்வதாகவும் கூறினர் .

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு பெண் தரிசனத்திற்காக வந்தார். சந்தேகமடைந்த பக்தர்கள் அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினர். அதை பரிசோதித்தபோது ஆந்திராவை சேர்ந்த பாலாம்மா(46) என தெரியவந்தது. இதையடுத்து அவரை செல்ல விடாமல் பக்தர்கள் தடுத்தனர். அப்போது பாலம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்தார். போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்சில் பம்பைக்கு அனுப்பி வைத்தனர். பம்பை அரசு மருத்துமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடுத்த சில மணி நேரத்தில் ஒரு இளம்பெண் பம்பையில இருந்து சன்னிதானம் நோக்கி புறப்பட்டார். மரக்கூட்டம் பகுதியில் வைத்து சந்தேகம் அடைந்த பக்தர்கள் அவரை மறித்து வயது குறித்து கேட்டனர். அவர் எந்த பதிலும் கூறாமல் சென்றார். இதையடுத்த பக்தர்கள் திரண்டு அவரை முற்றுகையிட்டு சரண கோஷம் எழுப்பினர். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஆந்திராவை சேர்ந்த புஷ்பலதா(42) என்று ெதரிய வந்தது. போலீசார் அவரையும் பம்பைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ஆந்திராவில் இருந்த 40 பேர் கொண்ட குழு கேரளாவில் பல்வேறு கோயில்களுக்கு சென்றுவிட்டு சபரிமலைக்கும் வந்துள்ளது தெரிய வந்தது. இந்த சம்பங்களால் நேற்று சபரிமலையில் பரபரப்பு நீடித்தது. இதற்கிடையே, நாளுக்கு நாள் சபரிமலையில் நிலைமை மோசமாவதை தொடர்ந்து, தற்போது நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார். மேலும், பந்தளம் அரண்மனை நிர்வாக குழு உறுப்பினர் சசிகுமார வர்மா கூறுகையில், ‘‘சபரிமலையில் ஆச்சார விதி மீறல் ஏற்பட்டால் கோயிலை மூட பந்தளம் அரண்மனைக்கு உரிமை உண்டு. எனவே ேதவைப்பட்டால் சபரிமலை கோயிலை மூடவும் நாங்கள் தயங்கமாட்டோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala ,Andhra ,women devotees , Continuous,tension,Sabarimala,stopped,Andhra women,devotees,Police security,intensity
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்