சீன போரின்போது எடுக்கப்பட்ட நிலங்கள் 56 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் நடவடிக்கை

பாம்திலா : இந்திய - சீன போரின்போது அருணாச்சல்லில் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 56 ஆண்டுக்குப்பின் ரூ38 கோடி இழப்பீடு தரப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே 1962ல் நடந்த போரின்போது ராணுவ குடியிருப்புகள், பதுங்கு குழிகள், ராணுவ தளங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவற்றை அமைப்பதற்காக அருணாச்சல பிரதேசத்தில் ராணுவம் அதிகளவில் நிலங்களை கையகப்படுத்தியது. இந்த நிலங்களுக்கு கடந்த ஆண்டு வரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த இழப்பீட்டை பெற்றுத் தந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் மேற்கு காமெங்க் மாவட்டத்தின் மூன்று கிராமத்தை சேர்ந்த 152 குடும்பத்தினருக்கு ரூ54 கோடியும், செப்டம்பரில்ரூ158 கோடியும் நஷ்டஈடு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் தவாங் மாவட்டத்தை சேர்ந்த 31 குடும்பத்தினருக்கு ரூ40.80 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேற்கு காமெங் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ38 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, மாநில முதல்வர் பீமா காண்டு இதற்கான காசோலைகளை உரிமையாளர்களுக்கு  வழங்கினர்.

மேற்கு காமெங் கிராமத்தை சேர்ந்த பிரேம் டோரீ கிரீமே ரூ6.31 கோடிக்கான காசோலையையும், புண்ட்சோ காவா ரூ6.21 கோடி மற்றும் காண்டூ குளோ ரூ5.98 கோடிக்கான காசோலைகளை பெற்றனர்.

இதுகுறித்து கிரண் ரிஜிஜூ கூறுகையில், “தேசிய நலனுக்காக கிராமத்தினரிடம் இருந்து நிலம் பெறப்பட்டன. ஆனால் 1960 முதல் எந்த அரசும் கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி கவலைப்படவில்லை. இந்த இழப்பீட்டை தற்பொழுது வழங்கியுள்ள பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மொத்தமாக ரூ37.73 கோடி இழப்பீடு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: