×

ரோகித் ஷர்மா 152*, விராத் கோஹ்லி 140 ரன் விளாசல்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி: ஹெட்மயர் சதம் வீண்

கவுகாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பர்சபாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இளம் வீரர் ரிஷப் பன்ட் அறிமுக வீரராக இடம் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹேம்ராஜ், தாமஸ் அறிமுகமாகினர்.கியரன் பாவெல், ஹேம்ராஜ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஹேம்ராஜ் 9 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டானார். கியரன் பாவெல் - ஹோப் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது. பாவெல் 51 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கலீல் பந்துவீச்சில் தவான் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த சாமுவேல்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். ஷாய் ஹோப் 32, ரோவ்மன் பாவெல் 22 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய ஹெட்மயர் சதம் விளாசி அசத்தினார். ஹெட்மயர் 106 ரன் (78 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் ஹோல்டர் 38 ரன், ஆஷ்லி நர்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. பிஷூ 22 ரன், ரோச் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாகல் 3, ஷமி, ஜடேஜா தலா 2, கலீல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 323 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் 4 ரன் எடுத்து தாமஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ரோகித் - கேப்டன் கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 246 ரன் சேர்த்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர். 88 பந்தில் சதம் விளாசிய கோஹ்லி, 140 ரன் (107 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பிஷூ சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து வந்த ராயுடு பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ரோகித் ஷர்மாவும் சதத்தை நிறைவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 150 ரன்களையும் கடந்தார். இந்தியா 42.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ரோகித் 152 ரன் (117 பந்து, 15 பவுண்டரி, 8 சிக்சர்), ராயுடு 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டணத்தில் 24ம் தேதி நடைபெறுகிறது.

36வது சதம்...
* இந்திய அணி கேப்டன் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் நேற்று தனது 36வது சதத்தை விளாசினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5வது சதம். 2018ல் கோஹ்லி விளாசிய 4வது சதம் இது.
* நடப்பு சீசனில் 2000 சர்வதேச ரன் குவித்த முதல் வீரர் என்ற பெருமையும் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.
* ரோகித் ஷர்மா தனது 20 வது சதத்தை பதிவு செய்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இது அவரது முதல் சதமாகும்.
* ஹெட்மயர் 13 ஒருநாள் போட்டியில் தனது 3வது சதத்தை விளாசி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rohit Sharma ,win ,Virat Kohli ,Hamilton ,India , Rohit Sharma,Virat Kohli,scored,India,win,heytmar,century,
× RELATED ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி