22 எம்எல்ஏக்களின் தொகுதிகளை அரசு புறக்கணிப்பதை கண்டித்து நவ.10 முதல் உண்ணாவிரத போராட்டம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்களின் தொகுதி மக்களை அரசு புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 10ம் தேதி முதல் தொகுதி வாரியாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அமமுக துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். சென்னை அசோக்நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு டிடிவி.தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், கதிர் காமு, உமா மகேஷ்வரி, ஜெயந்தி பத்மநாபன், மாரியப்பன் கென்னடி, முத்தையா, சோளிங்கர் பார்த்தீபன் உள்ளிட்ட தகுதி நீக்கம் ெசய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதேபோல், தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ள ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பின்னர், டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் எதுவும் சென்றடையவில்லை. இதேபோல், ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் என்னுடைய தொகுதியான ஆர்.கே.நகரிலும் மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகிறது. இந்த அரசு எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்கு கொண்டுசெல்லவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செந்தில்பாலாஜி அரவக்குறிச்சியில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளார். மேலும், ஆண்டிப்பட்டியில் நவ. 10ம் தேதி, நிலக்கோட்டையில் 11ம் தேதி, திருப்போரூரில் 13ம் தேதி, பாப்பிரெட்டிபட்டி 14ம் தேதி, குடியாத்தம் 16ம் தேதி, பெரம்பூரில் 17ம் தேதி, பரமக்குடியில் 20ம் தேதி, மானாமதுரை 21ம் தேதி, விளாத்திகுளம் 24ம் தேதி, ஒட்டப்பிடாரம் 26ம் தேதி, சாத்தூரில் 27ம் தேதியும், இதேபோல், ஆம்பூரில் டிசம்பர் 1ம் தேதி, பூந்தமல்லி 5ம் தேதி, சோளிங்கர் 6ம் தேதி, தஞ்சாவூர் 8ம் தேதி, அரூரில் 11ம் தேதி, பெரியகுளம் 15ம் தேதி,

அறந்தாங்கி 16ம் தேதி, திருவாடனை 17ம் தேதி, விருத்தாசலம் 18ம் தேதி, கள்ளக்குறிச்சியில் 19ம் தேதி மற்றும் ஆர்.கே.நகரில் 21ம் தேதியும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம்.  டிசம்பர் இறுதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடிப்போம். 2 கோடி பேர் உறுப்பினர்களாக ஆவார்கள். இவ்வாறு கூறினார்.

3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை?

அதிமுகவில் எம்.எல்.ஏக்களாக உள்ள ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் நேற்று நடைபெற்ற அமமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் போன்று இந்த 3 பேர் மீதும் விரைவில் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: