தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொல்லியல் துறையினருடன் இணைந்து 2-வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ராஜராஜ சோழன் சிலையும், லோகமாதேவி சிலையும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆர்ட் காலரியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்தனர். அந்த சிலை, பெரிய கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இதன்பின், கோயிலில் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர். கடந்த 11ம் தேதி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் போலீசாரும், இந்திய தொல்லியல் துறை தெற்கு மண்டல கூடுதல் இயக்குனர் நம்பிராஜன் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்ததும் கூடுதல் எஸ்.பி. ராஜாராமன் கூறும்போது, `இங்கு சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக தெரியவந்து உள்ளது.

எனவே மீண்டும் ஆய்வு நடத்தப்படும்’ என்று தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று காலை 9 மணிக்கு கூடுதல் எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் 15 போலீசாரும், தொல்லியல்துறை கூடுதல் இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 10 பேரும் வந்து ஆய்வை தொடங்கினர். பெரிய கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த 48 சிலைகளை ராஜா மண்டபத்துக்கு ஊழியர்கள் எடுத்து வந்து வரிசையாக வைத்தனர். அந்த சிலைகள் ஐம்பொன்னா, பித்தளையா, கல்லா, ஒவ்வொரு உலோகமும் எத்தனை சதவீதம் சிலைகளில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் தொன்மை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.  சிலைகளின் தன்மையை அறிய எக்ஸ்.ஆர்.எப். கருவிகளை பயன்படுத்தினர். சிலை மீது எக்ஸ்.ஆர்.எப். கருவியை வைத்தால், அந்த சிலையில் உள்ள உலோகங்கள் எவை எவை, அது எத்தனை சதவீதம் சேர்க்கப்பட்டு உள்ளது என்பதை அந்த கருவி காட்டும்.

முன்னதாக, மாமன்னன் ராஜராஜசோழனின் சதயவிழாவையொட்டி, பெரிய கோயில் அருகே அவரது சிலைக்கு கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பின்னர் பெரிய கோயிலில் பெருவுடையார், பெரியநாயகிக்கு பால், தயிர், தேன், திரவியப்பொடி உள்ளிட்ட 48 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சதய விழா நடைபெறும்போது கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: