வீடு கட்டி தருவதாக பல கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்: கட்டுமான நிறுவனம் மீது குற்றச்சாட்டு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம், வேளச்சேரி - தாம்பரம் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான நிறுவனத்திடம் கடந்த 2012ம் ஆண்டு வீடு முன்பதிவு செய்து, பலர் கோடிக்கணக்கில் பணம் செலுத்தினர். இவர்களுக்கு 2015ம் ஆண்டு வீடுகள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை. மேலும் கடந்த 2 மாதங்களாக அங்கு கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பணம் செலுத்தியவர்கள் கேட்டபோது, எங்களிடம் பணம் இல்லை. அதனால் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது, என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த 70க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வேளச்சேரி - தாம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  சேலையூர் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘‘272 பேர் பலகோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளனர். எங்களுக்கு இதுவரை வீடு வழங்கவில்லை. இதுபற்றி கேட்டால் முறையாக பதிலளிக்கவில்லை. விரைவில் எங்களுக்கு வீடுகளை வழங்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: