மர்ம காய்ச்சலால் மாணவன் பலி: புளியந்தோப்பு மக்கள் பீதி

பெரம்பூர்: மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் புளியந்தோப்பு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. புளியந்தோப்பு திரு.வி.க. 9வது தெருவை சேர்ந்தவர் பெரோஸ்கான். இவரது மகன் அஸ்லாம்கான் (8). இச்சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அதிகாலை முதல் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட முறை வாந்தி எடுத்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவனை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அஸ்லாம்கான் பரிதாபமாக இறந்தான்.

தகவலறிந்த அப்பகுதி மக்கள் சரிவர சுகாதார பணிகளை மேற்கொள்ளாத மாநகராட்சி மற்றும் சுகாதார துறை அதிகாரிகளை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். புளியந்தோப்பு போலீசார்  சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வடசென்னை பகுதியில் சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளது. குறிப்பாக, ஆர்கே நகர், தண்டையார்பேட்டை,  கொருக்குப்பேட்டை, துறைமுகம், ராயபுரம், பெரம்பூர், கொடுங்கையூர்,  வியாசர்பாடி, திரு.வி.க.நகர் உள்பட அனைத்து பகுதியிலும் கால்வாய்களில் அடைப்பு  ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது.

குப்பை மலைப்போல் குவிந்துள்ளது. சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. பாதாள சாக்கடை அடைப்புகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்வது இல்லை. இதில் கொசுக்கள்  உற்பத்தியாகி, மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி உயிர்  பலிகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், புளியந்தோப்பு அம்பேத்கர் நகரை சேர்ந்த மோகனா (36) என்ற பெண்ணுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன் பெரம்பூரில் சிறுவன் ஒருவன் இறந்துள்ளான். இதே நிலை தொடர்ந்தால், மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: