மதுரை, கிருஷ்ணகிரி, திண்டிவனம் அருகே ஒரே நாளில் நடந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலி: 8 பேர் படுகாயம்

வாடிப்பட்டி: மதுரை, கிருஷ்ணகிரி, திண்டிவனம் அருகே ஒரே நாளில் நடந்த சாலை விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக இறந்தனர்.  

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தன் மனைவி மரத்தி(67). இவரது மகள் லட்சுமி(38). பேத்தி வசந்தி(20). இவரது ஏழு மாத கைக்குழந்தை அத்விக். குழந்தைக்கு உடல்நலமில்லாததால் மூவரும் நேற்று காலை 10.15 மணியளவில்  உள்ள மருத்துவமனைக்கு செல்ல, மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலை ஓரம் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது கோவை மாவட்டம், சூளூரை சேர்ந்த பலசரக்கு கடை உரிமையாளர் முருகேசன் குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். வடுகபட்டிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்ற மரத்தி உள்ளிட்ட 4 பேர் மீதும் பயங்கரமாக மோதி அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது.

இதில் மரத்தி, லட்சுமி சம்பவ இடத்திலேயும், படுகாயமடைந்த வசந்தி, ஏழு மாத குழந்தை அத்விக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். சூளகிரி:  கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆஸ்டின் நகரை சேர்ந்தவர் ஜோசப் ராஜன்(40) தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருடன், நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாமங்கலத்தில் உள்ள தேவாலயத்துக்கு சொகுசு காரில் சென்றனர். சூளகிரி அருகே  வழி தெரியாமல் தாண்டிச்சென்றதால், மீண்டும்  திரும்பி வருவதற்காக பிரிவு சாலையில் காரை டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது லாரி மோதி தூக்கி வீசப்பட்ட கார், எதிரே உள்ள சாலையில் போய் விழுந்து நொறுங்கியது. இதில், காரில் இருந்த மேரிவைலட் சரோஜா, மகள் டாரஸ், பேத்தி ஏஞ்சல், உறவினர் மேரி அனிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  மற்ற 5 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

திண்டிவனம் அருகே: சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் மூக்கையன். இவரது மகன் விஜயகுமார் (29). சென்னை திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். இவர் தனது 8 மாத பெண் குழந்தை ஞானியாவிற்கு காதுகுத்துவதற்காக சொந்த ஊரான தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் 2 கார்களில் சென்றுவிட்டு, நேற்று சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அதில் ஒரு காரை விஜயகுமாரின் நண்பர் அருண்குமார்(28) ஓட்டிவந்தார். திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறம் கார் மோதி விஜயகுமார், அவரது மனைவி சபரி (25), மாமியார் ராமலட்சுமி (45) ஆகிய 3 பேரும் இறந்தனர். அருண்குமார் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். காலையில் சென்னையில் வேலைக்கு போக வேண்டும் என்று அருண்குமார் அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: