தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு வைகை அணை நிரம்புவதால் 5 மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கை: பெரியகுளத்தில் 100 ஏக்கர் நெற்பயிர் நாசம்

ஆண்டிபட்டி: வைகை அணை நிரம்புவதால் கரையோரம் வசிக்கும் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பெரியகுளத்தில் 100 ஏக்கர் நெற்பயிர் நாசமானது. வெள்ளிமலை, மேகமலை, வருசநாடு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுவதால், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, வைகை அணைக்கு விநாடிக்கு 2,675 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. நீர்மட்டம் 68.50 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உள்ளது. இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வம், வைகை கரையோரம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ``நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது’’ என்றனர்.  

வீடுகளில் வெள்ளம்: தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் பிள்ளையார்ஊத்து, பெரம்புவெட்டி ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து தேவாரம் சுற்றுவட்டார குடியிருப்புக்குள் புகுந்தது. சுமார் 100 வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்தன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பொழிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தேனி அருகே உப்புக்கோட்டை, போடியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய கனமழை விடிய, விடிய  பெய்தது. இதனால் வடகரையில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.

ராமேஸ்வரம் கோயிலில் மீண்டும் மழை நீர் புகுந்தது

ராமேஸ்வரத்தில் நேற்று சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் ராமநாத சுவாமி கோயில் பிரகாரத்திற்குள் மழைநீர் தேங்கி நின்றது. சுவாமி, அம்பாள் சன்னதியில் கர்ப்பக்கிரஹத்தில் இருந்து அபிஷேக நீர் வெளியேறும் கால்வாயிலும், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்த நீருடன், கழிவுகளுடன் மழைநீரும் தேங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் கோயில் ஊழியர்கள் தேங்கிய மழை நீரை வெளியேற்றினர். கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக கோயிலில் மழை நீர் தேங்கி நின்றதால், கால்வாய்களை முறையாக பராமரிக்க பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: