கிருஷ்ணகிரி அருகே தொடர் மின்வெட்டால் ஆத்திரம் மின்வாரிய அதிகாரி, மகள் மீது வீடு புகுந்து சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி மசூதி தெருவில் வசிப்பவர் மாயவன்(56). இவர், அஞ்செட்டி மின்வாரிய அலுவலகத்தில், இளநிலை பொறியாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை, அஞ்செட்டி அருகே மட்டியூர் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதானது. இதையடுத்து, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீர்செய்யும் பணிகள் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினமும் அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, பழனி ஆகியோர், அன்று மாலை மாயவன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவற்றை அவர்கள் உடைத்துள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட மாயவன், அவரது மகள் கோமதி ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும், அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அவர்களை பின்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும், அங்கும் மாயவனை தாக்கினர். இதையடுத்து, மாயவன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அஞ்செட்டி போலீசார் பழனியை கைது செய்தனர். தலைமறைவான கிருஷ்ணன், சுந்தரமூர்த்தியை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: