காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலையை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் புதிய சோமாஸ்கந்தர் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று சோமாஸ்கந்தர் சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவர் சோமாஸ்கந்தர் திருமேனி உள்ளது. இதை மாற்றி புதிய சிலை செய்ய கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், கோயில் ஸ்தானிகர்கள் உள்ளிட்டோர் தன்னிச்சையாக முடிவெடுத்தனர். அதற்காக உள்ளூர், வெளியூர், வெளிநாடு வாழ் பக்தர்களிடம் பல கிலோ தங்கம் நன்கொடையாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலைகடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில், சிலைகளை ஆய்வு செய்தபோது சிலையில் எள்ளளவும் தங்கம் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் இந்த வழக்கின் விசாரணையில் கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நேற்று புதிய சோமாஸ்கந்தர் சிலைக்கு கோயில் அர்ச்சகர்கள் சுமார் 10 பேர் பாலாலயம் செய்தனர். பாலாலயம் என்பது திருப்பணி நடைபெறும்போது, உற்சவர் திருமேனிக்கு பாலாலயம் செய்து திருப்பணிகள் முடிந்த பிறகு பூஜைகள் நடைபெறுவது. அதேபோன்று நேற்று புதிய உற்சவர் சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (21ம் தேதி) அல்லது நாளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சார்பில், நீதிமன்றத்தில் புதிய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: