ஊதிய உயர்வு கோரி கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகம் முன்பு போராட்டம்

சென்னை: மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் முன்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை 11 மணியளவில் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் பெருந்திரள் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் கலந்துகொண்டு ஊதிய உயர்வு, பாரபட்சம் காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மெட்ரோ ரயிலில் ஏற்கனவே ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சம்பளத்தை குறைத்ததாலும், குறைத்தது மட்டும் அல்ல அவர்களிடம் இருந்து ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பளத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேல் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட சம்பள உயர்வும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வில் அதிகாரிகளுக்கு 15 சதவீதம், தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் எனவும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் 20 நாட்கள் அரை சம்பளத்திலேயே பணியாற்றி வந்துள்ளனர்.சட்டப்படியான கூடுதல் பணி நேரத்திற்கு ஊதியம் தருவதில்லை. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நிறைய பாரபட்சம் உள்ளது. டெல்லி மெட்ரோவில் உள்ள சலுகைகள் போன்று சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: