மீ டூ பெண்களுக்கு வரப்பிரசாதம் அதை தவறாக பயன்படுத்த கூடாது: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ‘பேட்ட’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, வாரணாசியில் இருந்து நேற்று பகல் 11.50 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

படப்பிடிப்பு முடிந்து விட்டதா?

ஆம். எல்லாம் நல்ல படியாக முடிந்து விட்டது.

படப்பிடிப்பை முன்னதாகவே முடித்து விட்டீர்களே?

ஆமாம். நம்முடைய திரைப்பட துறையினர் அனைவரும் கடினமாக பணியாற்றி, சுறுசுறுப்பாக செயலாற்றி முன்னதாகவே முடித்து விட்டனர். நவம்பர் 6ம் தேதி வரை படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. தற்போது 15 நாட்களுக்கு முன்னதாகவே முடித்து விட்டோம்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில், வாக்களிப்பது எப்படி என்பது பற்றி தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்படுகிறதே? நீங்கள் மிக விரைவில் அரசியலில் களம் இறங்குவீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி ஒன்றும் இல்லை. நான் கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் இருக்கிறது. சரியான நேரம், காலம் பார்த்து கட்சி தொடங்குவேன். வரும் டிசம்பர் 12ம் தேதி என் பிறந்தநாளில் அதுபற்றி அறிவிக்கவில்லை.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பது, நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது போல் ஆகாதா?

பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும், கோயில் என்று சொல்லும்போது, ஒவ்வொன்றுக்கும் ஒரு சடங்கு இருக்கும். காலம்காலமாக இருந்து வரும் ஒரு ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையிடக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

அப்படி என்றால், உச்சநீதிமன்ற தீர்ப்பு உதாசீனப்படுத்தப்படுகிறதா?

அப்படி இல்லை. தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், மத சம்பந்தமான விஷயத்தில், சடங்குகளில் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்து செயல்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் நீங்கள் 40 நாட்களாக இல்லை. அந்த நேரத்தில் இங்குள்ள அரசியல் நிலவரம் பற்றி?

நான்தான் தமிழ்நாட்டில் இல்லையே. பிறகு என்ன பார்க்க இருக்கிறது?

‘மீ டூ’ விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பிரச்னையாக இருக்கிறதே?

இது பெண்களுக்கு சாதகமான ஒரு நிலை. ஆனால், இதை அவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. சரியாக பயன்படுத்த வேண்டும்.

வைரமுத்து மீது கூட பாடகி சின்மயி இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளாரே?

வைரமுத்து அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்றும், அதற்கு ஆதாரங்கள் இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறாரே. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறினால், வழக்கு போடுவேன் என்று வைரமுத்து கூறியிருக்கிறார்.

‘மீ டூ’ விவகாரத்துக்கு நீங்கள் ஆதரவா?

பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அதை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன?

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கட்டும். பிறகு அதுபற்றி சொல்கிறேன்.

‘பேட்ட’ டயலாக் ஒன்று சொல்லுங்கள்?

ஹாஹ்ஹா. ‘பேட்ட பராக்’.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: