ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை:அமர்தசரஸ் ரயில் விபத்தில் உயரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் ஜோதா பதக் என்ற இடத்தில் ரயில் மோதியதில் பொது மக்கள் 61 பேர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் உயர்தர சிறப்பு சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரயில் விபத்தால் சிறியவர், பெண்கள், பெரியவர் போன்றோர் உயிரிழந்திருப்பதும், படு காயமடைந்திருப்பதும் பொது மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே மத்திய அரசு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத்தொகையாக வழங்க வேண்டும். எந்த மாநிலத்தில் ரயில் விபத்துக்கள் நடைபெற்றாலும் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உண்டு. எனவே மத்திய அரசு இந்த ரயில் விபத்து நடைபெற்றதற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் ரயில் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பொது மக்கள், ரயில் பயணிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: