×

மாநகராட்சி அலட்சிய போக்கு மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதார கேடு

திருப்பூர் : பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில் ஆயுதபூஜைக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து எல்லா பகுதிகளிலும் குப்பைகள் மலைபோல் தேங்கியிருக்கின்றன. இந்த குப்பைகளை அப்புறப்படுத்தாததால் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் நகரத்தை நாறடித்து வருகிறது. திருப்பூரில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. பனியன் தொழில் சார்ந்த சாய ஆலைகள் 700கும் மேல் உள்ளன. இது தவிர பல்வேறு உபதொழில்களும் பல நூற்றுக்கணக்கில் செயல்படுகின்றன.

வேறு பல தொழில் நகரங்களைப் போல் அல்லாது, திருப்பூரைப் பொறுத்தவரை மக்களின் குடியிருப்புகளுக்கு உள்ளேயே பின்னலாடைத் தொழிலகங்களும் பின்னிப் பிணைந்து அமைந்துள்ளன. இதனால் வீட்டு உபயோக கழிவுகள், குப்பைகள் மட்டுமின்றி, தொழிற்சாலை குப்பைகளும் இங்கு அதிக அளவில் உற்பத்தியாகின்றன.  சராசரியாக நாளொன்றுக்கு நகரில் ஆயிரம் டன் குப்பைகள் உற்பத்தியாகின்றன. அதேசமயம் தொழில் நகரம் என்ற முறையில் இங்கு ஆயுதபூஜைக் கொண்டாட்டம் பிரசித்தம். அனைத்து பனியன் தொழிலகங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் ஆயுதபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  இந்த கொண்டாட்டத்திற்கு முன்பாகவே தொழிலகங்களை சுத்தப்படுத்துவது, வர்ணம் பூசுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது தொழிலகங்களில் தேங்கிய கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அந்தந்த பகுதிகளிலேயே குப்பை கொட்டும் இடங்களில் குவித்து விடுகின்றனர். இதுதவிர கொண்டாட்டத்திற்குப் பிறகும் வாழை மரங்கள், இதர உபபொருட்கள், கழிவுகளையும் குப்பை கொட்டும் இடங்களில் கொட்டி விடுகின்றனர்.  நேற்று முன்தினம் (18ம் தேதி) ஆயுதபூஜை கொண்டாடப்பட்ட நிலையில், இன்னும் பல இடங்களில் அகற்றப்படாமல் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன.

மொத்தமுள்ள 60 வார்டுகளில் இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த 30 வார்டுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டு மண்டலங்களிலும் போதுமான துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. தனியாரைப் பொறுத்தவரை போதிய துப்புரவுப் பணியாளர்களை நியமிக்காமல் உள்ளனர்.  மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் இருந்தால்தான் இந்த நகரைத் தூய்மையாக வைத்திருக்க முடியும். ஆனால் மாநகராட்சியில் இருப்பதோ ஆயிரத்திற்கும் கீழ், இந்த நிலையில் மலைபோல் தேங்கிய ஆயுதபூஜை குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த விசேஷ ஏற்பாட்டையும செய்யவில்லை. வழக்கம் போல் பல பகுதிகளிலும் குப்பைகள் வீதிகள் தோறும் பரவிக் கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடும், தொற்று நோய்த் தாக்குதலும் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது.

 எனவே இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்படாமல் மாநகராட்சி நிர்வாகம் துரித கதியில் செயல்பட்டு தேங்கிய குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். குறிப்பாக வழக்கமான நாட்களில் குறைந்தபட்சம் உள்ளூர் கவுன்சிலர்கள் இதில் ஓரளவு கவனம் செலுத்துவார்கள். பொது மக்களும் கவுன்சிலர்களிடம் முறையிட வாய்ப்பிருந்தது. தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களோ, ஏதோ தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனை போல் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அதிகாரிகள் தான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே துரிதகதியில் செயல்பட்டு பின்னலாடை நகரத்தை தூய்மைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சுகாதார சீர்கேடடைந்த, அசுத்தமான நகரமாகவே இந்த டாலர் நகரம் நாறிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Corporal , garbage disposal,tirupur ,health hazard ,people
× RELATED கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை...