×

வீடுகளுக்கு சுத்தம் செய்ய அட்வைஸ் தெருக்களைக் கண்டு கொள்ளாத காரைக்குடி நகராட்சி நிர்வாகம்

காரைக்குடி : வீடுகளைச் சுத்தமாக வைக்க வேண்டும் என அட்வைஸ் செய்யும் காரைக்கு நகராட்சி நிர்வாகம் தெருக்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பை, புதர்கள் கொசு உற்பத்தி மையங்களாக மாறி வருகிறது. காரைக்குடி நகராட்சி உட்பட்ட 36 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதிகளில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தினமும் 48 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.

 நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தினமும் குப்பை வாங்குவதற்கு என நகராட்சி சார்பில் 170க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். குப்பை வாங்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் 120க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களைக் கொண்டு குப்பை வாங்கும் பணியை செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்துக்கு மாதத்திற்கு ரூ. 16 லட்சத்துக்கு மேல்  நகராட்சி மூலம் தரப்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மட்டுமே வாங்குகின்றனர். ஆனால், தெருக்களைச் சுத்தம் செய்வது இல்லை. இதனால் தெருக்கள் முழுவதும் புதர் மண்டியும், குப்பைகள் குவிந்தும் காணப்படுகிறது. காரைக்குடி நகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே  காய்ச்சல் பரவி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெரு குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  வீடு. வீடாக வரும் அதிகாரிகள் வீட்டில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என மக்களுக்கு அறிவுரை கூறுகின்றனர்.

ஆனால், தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பை, புதர்களில் கொசு உற்பத்தி அமோகமாக நடந்து வருவதை கண்டு கொள்ளவில்லை. இவற்றை அப்புறப்படுத்தி தெருக்களை சுத்தமாக வைக்காத நகராட்சியின் மீது யார் நடவடிக்கை எடுப்பது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `` துப்புரவு பணியாளர்கள் முன்பு காலை நேரங்களில் ஒவ்வொரு டிவிஷனுக்கு என ஒதுக்கப்பட்ட தெருக்களை சுத்தப்படுத்தி, குப்பையை வாங்கவேண்டும். பின்பு மதிய நேரங்களில் அனைத்து துப்புரவு பணியாளர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு வார்டு பகுதியை சுத்தம் (மாஸ் கிளினிங்) செய்வார்கள்.  

இது போன்று ஒவ்வொரு வார்டு பகுதியாக சுத்தப்படுத்தப்படும். இதில் தெருக்களில் உள்ள கால்வாய்கள், சாலையோரங்களில் உள்ள செடிகளை அகற்றுவது, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது மற்றும் கொசு மருந்து அடிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தெருக்களின் இடையே உள்ள சிறிய சத்துகளையும் சுத்தப்படுத்த  வேண்டும். இதன் மூலம் அந்த வார்டு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணப்படும். இதுபோன்று ஒவ்வொரு வார்டாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 ஆனால், இப்பணி கடந்த பல வருடங்களாக இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் தெருக்கள் முழுவதும் செடிகள், முட்புதர்கள் மற்றும் குப்பை மண்டி கிடக்கிறது. இதுஅதிகாரிகளின் பார்வையில் பட்டும் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் அதிகாரிகள் பாராமுகமாகவே செயல்படுகின்றனர். தெருக்களை சுத்தம் செய்யாமல் டெங்குவை கட்டுப்படுத்துவது எப்படி என தெரியவில்லை. நகராட்சி துப்புரவு பணிகளை கண்காணிக்க சப்கலெக்டர் தலைமையில் தனி டீம் இருந்தும் பயனற்ற நிலையே உள்ளது. எனவே, கிடப்பில் போடப்பட்ட மாஸ் கிளினிக் பணியைமீண்டும் செயல்படுத்த வேண்டும். இதனை ஒவ்வொரு மாதமும் நடைமுறை படுத்த வேண்டும்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Municipal Administration ,Karaikudi ,houses ,street ,Advis , karaikudi,karaikudi muncipality,wastages, people
× RELATED முன்னாள் நகராட்சி இயக்குனருக்கு ஓராண்டு சிறை