×

வடகாடு மலைப்பகுதியில் விவசாயத்திற்கான வாகனங்களை அனுமதிக்க மறுக்கும் வனத்துறை

* நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

ஒட்டன்சத்திரம் : வடகாடு மலைப்பகுதியில் விவசாயத்திற்கு தேவையான வாகனங்களை வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டது. ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு மலைக்கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செடி பயிர்களான பீன்ஸ், காலிபிளவர், அவரை, தட்டைபயறு மற்றும் மரப் பயிர்களான மா, பலா, வாழை எலுமிச்சை, தென்னை போன்ற விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், ‘‘இங்குள்ள விவசாய நிலங்களை சீரமைக்க பொக்லைன் இயந்திரம், தண்ணீர் வசதிக்கு போர்வண்டி ஆகியவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. ஆனால் கடந்த ஒருமாத காலமாக மாவட்ட வன அலுவலரின் உத்தரவு என்று சொல்லி மேற்சொன்ன வாகனங்களை அனுமதிக்க மறுக்கின்றனர். வடகாடு ஊராட்சியானது அடர்ந்த வனப்பகுதி இல்லை. விலை உயர்ந்த மரங்கள் இல்லை, காய்கறி உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பகுதியாகும். இதனால் எங்கள் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வடகாடு மலைப்பகுதியில் உள்ள பட்டா நிலங்களை பராமரிப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை அனைத்து வாகனங்களும் சென்று போர் போடப்பட்டது. பொக்லைன் வைத்து பட்டா நிலங்கள் சீரமைக்கப்பட்டது, வனத்துறையினர் வனங்கள் மற்றும் வனநிலங்களில் செய்யும் குற்றச்செயல்களை தடுக்காமல் பட்டா நிலங்களில் விவசாயிகள் செய்யும் வேலைகளை தடுத்து, வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறார்கள். இதுபற்றி வன அதிகாரிகளை கேட்கும்போது அலைக்கழிக்கும் நோக்கத்தில் காலை, மாலை என 2 வேளையுமாக உயர் அதிகாரிகளிடம் கேளுங்கள் என மக்களை சிரமமப்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் பெய்யும் மழையால் வரப்புகள் மற்றும் வாய்க்கால் சேதாரமாகி விடுகிறது. இதனை சரி செய்ய இயந்திரங்கள் எங்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதனை வனத்துறையினர் தடுக்கின்றனர். ஏற்கனவே வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு வரும் நாங்கள் தற்போது வனத்துறையினர் கெடுபிடியால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. க்ஷஎனவே இவற்றைசரிபடுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Forest Department ,North , Forest Department,vehicles,farmer materials, vadakaadu, people affected
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...