×

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடுநீங்கி இயல்பு நிலை திரும்பியது

சென்னை: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆனதை தொடர்ந்து, தனியார் தண்ணீர் லாரிகள் தங்களது பணியை தொடங்கின. இதனால் தண்ணீர் இல்லாமல் தவித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வணிக வளாகங்கள் வரை தண்ணீர் தட்டுப்பாடு சீராகியது. நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவால், நிலத்தடி நீர் எடுக்க தடை ஏற்பட்டது. மேலும் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. இதனால் தனியார் தண்ணீர் லாரிகளுக்கு தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதை கண்டித்து தென்சென்னை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் அறிவித்தார். இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் லாரிகள் இயக்கப்படவில்லை.  சென்னை மாநகரில் முக்கிய வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவைகளின் 80 சதவீத தண்ணீர் தேவையை தனியார் தண்ணீர் லாரிகள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் இந்த போராட்டம் தொடர்ந்ததோடு இவர்களுக்கு ஆதரவாக கேன் உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக குடிநீரும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதை பயன்படுத்தி பல இடங்களில் வாட்டர் கேன் விலை 150 வரை விற்கப்பட்டது. நிலைமை விபரீதமாகி போனதை தொடர்ந்து, தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.   சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டாததால் பேச்சுவார்த்தை முதலில் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையின்போது உங்களின் கோரிக்கையை முதல்வரிடம் எடுத்து கூறி அதற்கான தீர்வு காணப்படும் என்று வாய்மொழி உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தற்காலிகமாக இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை மக்கள் கொண்டாட இருக்கின்றனர்.அதனால் ஓட்டல்கள், குடியிருப்புகளில் வசிக்கும் வீடுகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் என்பதால் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தற்காலிகமாக இந்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என சங்கத்தினர் கூறினர். இதையடுத்து நேற்று காலை முதல் சென்னை புறநகர் பகுதியான வேளச்சேரி, பள்ளிக்கரணை, கந்தன்சாவடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், படூர், தாழம்பூர், சிறுசேரி, கேளம்பாக்கம், படூர் போன்ற பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு டேங்கர் லாரிகள் தண்ணீர் சப்ளை செய்ய தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தண்ணீர் இல்லாமல் தவித்து வந்தவர்கள் லாரிகள் தண்ணீர் சப்ளை செய்ய தொடங்கியதும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Water lorry owners ,Strike ,Chennai , Water lorry owners, Strike, Chennai, water scarcity
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து