×

ஓசைப்படாமல் சாதிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் இடையே விலை வித்தியாசம் குறைகிறது

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. இருப்பினும், இந்த இரண்டு எரிபொருளுக்கும் இடையிலான வித்தியாசம் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன தினசரி விலை நிர்ணயம் தொடங்கியதில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை ஓசைப்படாமல் அதிகரித்து வருகிறது. அதிலும், கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பெட்ரோல் 7.54 டீசல் 7.46 அதிகரித்துள்ளது. அக்டோபர்1ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெட்ரோல் 53 காசு, டீசல் 71 காசு உயர்ந்துள்ளது. ஏறக்குறைய இரண்டு எரிபொருளின் விலையும் ஒரே மாதிரியாக உயர்த்தப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் பெட்ரோலை விட டீசல் அதிக உயர்வை சந்தித்துள்ளது.

கடந்த 4ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தலா 1.50 குறைத்தது. எண்ணெய் நிறுவனங்கள் கூடுதலாக ஒரு ரூபாய் மானியச்சுமையை ஏற்றன. இதன்மூலம் பெட்ரோல், டீசல் தலா 2.50 குறைந்தது. ஆனால் அடுத்த நாள் முதலே விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கி விட்டன. அதன்பிறகு பெட்ரோல் 1.40, டீசல் 2.93 அதிகரித்துள்ளது. அதாவது, பெட்ரோலை விட டீசல் இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.   இதனால் இவை இரண்டுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் 47 காசு, டீசல் 22 காசு குறைக்கப்பட்டுள்ளது. இதிலும் பெட்ரோலை விட டீசல் விலை ஏற்றிய அளவுக்கு குறைக்கப்படவில்லை.  சென்னையில் நேற்று பெட்ரோல் 25 காசு குறைந்து 85.63 ஆகவும், டீசல் 11 காசு குறைந்து 79.82 ஆகவும் இருந்தது.

முன்பு பெட்ரோல், டீசல் இடையிலான விலை வித்தியாசம் சுமார் 10 ரூபாய் அளவுக்கு இருந்தது. இது படிப்படியாக குறைந்து வருவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே டீசல் விலை உயர்வை காரணம் காட்டி பஸ் கட்டணங்கள், சரக்கு போக்குவரத்து, லாரி வாடகை கட்டணங்கள் உயர்ந்து விட்டன. இதே நிலை தொடர்ந்தால் பெட்ரோலுக்கு இணையாக டீசல் விலை வந்துவிடும். இது போக்குவரத்து, சரக்கு கட்டண உயர்வை ஏற்படுத்தி விலை உயர்வுக்கு வழி வகுத்து விடும். ஓசைப்படாமல் எண்ணெய் நிறுவனங்கள் இவ்வாறு விலையை உயர்த்தி வருவது பொதுமக்களை கடும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

சந்தோஷப்படாதீங்க தற்காலிகம்தான்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தி வந்த எண்ணெய்  நிறுவனங்கள், கடந்த 2 நாட்களாகத்தான் குறைத்துள்ளன. இதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்ததுதான். கடந்த செப்டம்பர் கடைசி வாரத்தில் பேரல் 79.36 டாலர் ஆக இருந்தது, 81.27 டாலராகவும், இந்த மாதம் முதல் வாரத்தில் 85.16ஆகவும் உயர்ந்துள்ளது. இது கடந்த சில நாட்களாக பேரல் 82.52 டாலர் எனவும், 79.54 எனவும் குறைந்துள்ளது. இந்த நிவாரணம் தற்காலிகமானதுதான் என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   83 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ஓராண்டில் இதற்கான செலவு டாலர் மதிப்பில் 50 சதவீதம், ரூபாய் மதிப்பில் 70 சதவீதம் உயர்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : oil companies , Oil companies, petrol, diesel
× RELATED 417 ரூபாயாக இருந்ததை ரூ.919க்கு...