×

டெங்கு பாதிப்பவர்களுக்கு உயர்தர சிகிச்சை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படவும், நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். மேலும், சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பால் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டப்பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100 இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு மாவட்டப் பகுதிகளில் டெங்கு, டைபாய்டு, மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தீவிர கண்காணிப்புடன் கூடிய உயர்தர சிகிச்சையை அளிக்க வேண்டும். நோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நம்பியே இருப்பதால், இங்கு மருந்து மாத்திரைகள் தேவையான அளவில் இருப்பில் இருப்பதை தொடர் நடவடிக்கை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dengue victims ,GK Vasan , dengue victims,GK Vasan
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...