×

தேமுதிக பொருளாளரானார் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தேமுதிக பொருளாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் அரசியலுக்கு வந்தார். இதற்கிடையே அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க கட்சியில் பலமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் சென்னை ேகாயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், பொது செயலாளருமான விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
 
கூட்டத்தில் தேமுதிக அவைத்தலைவராக டாக்டர் வி.இளங்கோவன், பொருளாளராக பிரேமலதா, கொள்கைப்பரப்பு செயலாளராக அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் தான் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரேமலதாவுக்கு கட்சியினரும், பல்வேறு கட்சியின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டியளிக்கையில், ‘‘கட்சியில் 14 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு பிறகு எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அப்போது தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். உள்ளாட்சி, இடைத்தேர்தலை அறிவிக்க முடியாத நிலையில் ஆளுங்கட்சி உள்ளது. பல காலமாக சபரிமலையில் கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Premalatha Vijayakanth ,Debtor , Premalatha Vijayakanth
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...