×

சிபிஐ விசாரணை உத்தரவுக்கு பிறகும் முதல்வராக பழனிசாமி நீடிக்கலாமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

தஞ்சை:இந்தியாவிலேயே முதன்முறையாக முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிக்கலாமா?’’ என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
 தஞ்சையில் நேற்று திமுக ஒன்றிய செயலாளர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: சில அரசியல்வாதிகள், சில காலமாக கேவலமாக பேசி வருகின்றனர். ஏற்கனவே தி.மு.க.வை கேவலமாக பேசியவர்கள் நிலை என்ன என்று எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக முதல்வர் பழனிசாமி தி.மு.க.வை பார்த்து ஒரு கம்பெனி என்று பேசி வருகிறார். ஆமாம் ஒரு கம்பெனிதான். ஒரு கம்பெனியை நடத்துவது அவ்வளவு எளிதானது இல்லை. அந்த கம்பெனிக்கு என்று நிறைய பங்குதாரர்கள் இருப்பார்கள். ஊழியர்கள் இருப்பார்கள்.

தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த கம்பெனியில் இருந்து வருமானத்தை பெற்று தங்களது குடும்பத்தை நடத்துவார்கள். ஆனால், பழனிசாமி அதிமுகவை சர்க்கஸ் கூடாரம்போல் நடத்துகிறார். அந்த சர்க்கஸ் கூடாரத்துக்கு ஒரு ரிங் மாஸ்டர் இருப்பார். அதன்படி அந்த கூடாரத்தை டில்லியில் இருந்து மோடி மஸ்தான் ரிங் மாஸ்டராக இருந்து செயல்படுத்துகிறார். நிகழ்ச்சிகளின் இடையே பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக பப்பூன் வந்து செல்வார். அதுபோல எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது வந்து ஏதாவது பேசி சிரிக்க வைத்து செல்கிறார்.  ஜெயலலிதா இறப்பு என்ற விபத்தால் பழனிசாமிக்கு முதல்வர் என்ற பதவி கிடைத்தது. அவர் தனது கையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார துறை, மீன்வளத்துறை என்று எல்லா துறைகளையும் வைத்துக்கொண்டு கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

நீதிமன்றமே எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையானது. இதை நீதிமன்றம் விசாரிப்பதைவிட சி.பி.ஐ. விசாரணை செய்வதே நல்லது என்று நினைத்து சி.பி.ஐ.  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்தியாவிலேயே எந்த முதல்வர் மீதும் சி.பி.ஐ.  விசாரணைக்கு உத்தரவிட்டது இல்லை. டெண்டர் விதிமுறைகளை எடுத்து பார்த்தால் தங்களது உறவினர்களுக்கு, சொந்தங்களுக்கு டெண்டர் விடக்கூடாது என்று உள்ளது. ஆனால் அந்த விதிமுறைகளை மீறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்களது உறவினர்களுக்கு டெண்டர் விட்டு ரூ.3 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்துள்ளார். முதல்வர் மட்டும் இன்றி அவரது அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளனர்.

இதுபோன்றவர்களை நாம் இனியும் ஆட்சியில் அமர வைக்கலாமா? தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி, அவரது ஆட்சி காலத்தில் நமக்கு தந்த திட்டங்கள் எல்லாவற்றையும் செயல்படுத்தவும், அவர் செயல்படுத்த நினைத்த திட்டங்கள் எல்லாவற்றையும் தரவும் தி.மு.க.வுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி என் மீதுதான் வழக்கு போடுவீர்களா, தி.மு.க. மீதும் வழக்கு போடுவேன் என்று பேசுகிறார். வழக்கு போடட்டும். அதை தி.மு.க. எதிர்கொள்ளும். தி.மு.க. எதிர்கொள்ளாத வழக்குகளே இல்லை. மக்களுக்காக போராடி சிறை சென்ற இயக்கம். மிசா, பொடா, தடா என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் வந்துள்ளது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும் இன்றி அவரது அமைச்சர்களான விஜயபாஸ்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு, குப்பை அள்ளியதில் ஊழல், பல்பு வாங்கியதில் ஊழல் என்று எல்லாவற்றிலும் ஊழல். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய டிஜிபி வீட்டில் ரெய்டு. இப்படி எல்லா வகையிலும் ஊழல். நாம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வரவுள்ளது. எனவே இதற்கு நாம் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். தி.மு.க. தேர்தல் நிதி திரட்டி கொண்டு இருக்கிறது. தேர்தல் நிதியாக ரூ.1 லட்சத்தை தலைமை கழகத்துக்கு செலுத்த வேண்டும் என நிர்ணயித்துள்ளோம்.  
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,CBI ,MK Stalin , CBI investigation, Chief Minister Palani, MK Stalin
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...