×

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அரசு சட்டம் இயற்ற வேண்டும் : மோகன் பகவத் வலியுறுத்தல்

நாக்பூர்: அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு மத்திய அரசு சட்டம் உருவாக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ்சின் ஆண்டுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் கலந்து கொண்டார். அப்போது மோகன் பகவத் கூறியதாவது: அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது தாமதமாகி வருவதற்கு அரசியலே காரணம். தேசிய நலனுக்கான இந்த விஷயமானது, சுயநலன்களுக்காக வகுப்புவாத அரசியலை பயன்படுத்தும் சில சக்திகளால் தடுக்கப்படுகின்றது. அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டவேண்டுமானால் அரசு சரியான மற்றும் தேவையான சட்டத்தை இயற்றவேண்டும்.

நிலத்தின் உரிமையாளர் குறித்து முடிவெடுப்பது விரைவுப்படுத்த வேண்டும். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கான வழிகளில் உள்ள தடைகள் அகற்றப்படவேண்டும். சுயமதிப்பீட்டு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கோயில் கட்டுமானம் என்பது அவசியமாகும். மேலும் நல்லெண்ணம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் இது வழிவகுப்பதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்டம் பலனளிக்காது

ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற சாத்தியம் இல்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. அப்படியே நாடமன்றத்தில் சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற அதை அமல்படுத்த 9 மாதங்களாவது ஆகும். ஆனால் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு குறைவான காலமே உள்ளது. அப்படியே சட்டம் இயற்றினாலும், அதை எதிர்த்துது எதிர் தரப்பினர் உச்சநீதிமன்றம் செல்வர்.

அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு எதிரான சட்டங்களை உச்சநீதிமன்றம் கடந்த காலத்தில் ரத்து செய்யத சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் ராமர் கோயில் கட்ட சட்டம் கொண்டு வந்தாலும் பலனளிக்காது என கூறப்படுகிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayodhya ,Mohan Bhagwat ,Ram Temple , Ayodhya , fulfilled , construction of Ram temple,Mohan Bhagwat
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...