×

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சியின் கதை தெரியும் : எஸ்.டி.உகம்சந்த் படத்திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை : மதுராந்தகம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவராக இருந்த எஸ்.டி.உகம்சந்த் சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவருடைய  படத்திறப்பு விழா நேற்று முன்தினம் மதுராந்தகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் நகர செயலாளர் எஸ்.டி பிரேம்சந்த் வரவேற்றார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் த.மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், எஸ்.டி.உகம்சந்தின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது: எஸ்.டி.உகம்சந்த், மாணவர் பருவத்திலேயே உலக ஆராய்ச்சி மையத்தின் செயலாளராக பணியாற்றி இருக்கிறார். 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளார். பொறுப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொறுப்பாக நடந்து கொள்ளும் மனிதர். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோருடன் நெருங்கி பழகியவர். ஆனாலும் கருணாநிதி மீது கொண்ட பற்றால் திமுகவில் தொடர்ந்து பணியாற்றினார். அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பதற்கு உறுதுணையாக இருந்தவர். சிறந்த ஆற்றலாளர். செயல்வீரர்.

இப்போது இருக்கிற ஆட்சியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தவே பயப்படுகிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளனர். முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்றுள்ளோம். ஜெயலலிதா மறைவின் காரணமாக விபத்தின் மூலம் முதல்வரான எடப்பாடி பழனிசாமி... எடப்பாடி என்று சொல்வதை விட எடுபுடி பழனிசாமி என்று சொல்லலாம். ஏனென்றால் மத்திய அரசு சொல்லும் எந்த ஒரு செயலையும் அப்படியே செய்கிறார். மத்திய அரசு எஜமானாகவும், எடப்பாடி எடுப்புடியாகவும் செல்படுகிறார். உளுந்தூர்பேட்டை கூட்டத்தில், என் மீதே வழக்கு தொடர்கிறார்கள் என்று புலம்புகிறார். தனது துறையின் மூலம் உறவினருக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். வழக்கில் முகாந்திரம் இருக்கிறது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த வழக்கை சந்திக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் சொல்வது போல, ‘‘நாங்களும் திமுக மீது வழக்கு போடுவோம்’’ என்று சொல்கிறார்கள். எம்ஜிஆர், சர்காரியா கமிஷன் ஊழல் வழக்கை ெகாண்டு வந்தார். ஜெயலலிதா, மேம்பால வழக்கை கொண்டு வந்தார். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்வேறு வழக்குகளை நாங்கள் சந்திப்பவர்கள். சிறை செல்ல நாங்கள் அஞ்ச மாட்டோம். 2ஜி வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும், தலைமை செயலக வழக்கில் அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி கமிஷனும் கலைக்கப்பட்டது. இந்த கொள்ளை ஆட்சிக்கு முடிவுக்கு வர  18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வரட்டும். அப்போது தெரியும் உங்கள் கதை. ஆட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற திமிரில் பேசுகிறீர்கள். இந்த அராஜக, கொள்ளைக்கார ஆட்சியை அகற்றவும், அப்பழுக்கற்ற ஆட்சி தமிழகத்தில் உருவாக நீங்கள் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,MK Stalin ,film festival ,SDU ,speech , 18 MLAs, AIADMK regime, MK Stalin's ,SDU film festival
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...