×

மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசவில்லை : அமைச்சர் விளக்கம்

சென்னை; மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தும் நோக்கில் அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் தமது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனை விமர்சிக்கவே சப்பாணி என்று கூறியதாகவும், அது அவர் நடித்த கதாபாத்திரம் என்பதால் அதை பயன்படுத்தியதாகவும் கூறினார். மாற்றுத்திறனாளிகள் தெய்வத்தின் குழந்தைகள். அவர்களை காயப்படுத்தும் எண்ணம் இல்லை. ஆவின் நிறுவனத்தில் 15% மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக  2 நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஆபத்து என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த கமல், ராஜேந்திரபாலாஜி ஒரு தீய சக்தி என்றும், சப்பாணி குழந்தை என்று விமர்சித்த அமைச்சரை பெண்கள், குழந்தைகள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளி பெண்ணான சுசீலா பொன்னுசாமி, புகார் ஒன்றை அளித்தார். அதில் கமலின் கட்சி குறித்து சப்பாணி குழந்தை, அது வளர்ந்தால் நாட்டுக்கே ஆபத்து என கூறி மாற்றுத்திறனாளிகளை மேற்கோளிட்டு அநாகரிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். இது தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனதை காயப்படுத்தி, மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி உள்ளதாகவும், எனவே அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister , Disabled persons, Minister for Dairy Development, Rajendra Balaji
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...