×

ஓராண்டில் பெட்ரோல் ரூ21 டீசல் ரூ23 விலை அதிகரிப்பு: லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பு

சேலம் : நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் பெட்ரோல் ரூ21ம், டீசல் ரூ23ம் விலை அதிகரித்திருக்கிறது. இது கடந்த காலங்களை விட மிக உச்சநிலை ஆகும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசலுக்கான விலையை, சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு தினமும் மாற்றி அமைத்து வருகின்றனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு வரை ஏற்ற, இறக்கத்தில் இருந்தநிலையில்,தற்போது தொடர்ந்து ஏற்ற நிலையில் மட்டும் இருக்கிறது.இதன்காரணமாக பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் கலால் வரியும் கடந்த காலங்களை விட அதிகளவு உயர்த்தப்பட்டதன் விளைவாக ஏற்றத்தை தவிர்க்க முடியாமல் திணறி வருகின்றனர்.

வழக்கமாக ஆண்டுக்கு பெட்ரோல், டீசல் விலை ரூ5 முதல் ரூ7 வரை அதிகரித்திருக்கும். ஆனால், கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதத்தில் இருந்து நடப்பு மாதம் (அக்டோபர்) வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ21ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ23ம் அதிகரித்திருக்கிறது. இது மிக உச்சப்பட்ச விலை ஏற்றமாகும். சேலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டர் ரூ71.11 ஆகவும், டீசல் விலை ரூ60.27 ஆகவும் இருந்தது. இதுவே நேற்றைய தினம் (16ம் தேதி) பெட்ரோல் விலை ரூ86.44 ஆகவும், டீசல் விலை ரூ80.40 ஆகவும் விற்கப்பட்டது. இது ஓராண்டில் பெட்ரோலுக்கு ரூ20.81ம், டீசலுக்கு ரூ23.24ம் உயர்ந்திருப்பதை காட்டுகிறது. இந்த விலையேற்றம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், சாதாரண மக்களும், லாரி உரிமையாளர்கள் உள்பட வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : liter , Petrol, price increase, lorry owner, heavy damage
× RELATED ஏப்ரல்-20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை