×

உணவு பொருட்கள் விலை சரிவால் பட்ஜெட் இலக்குகளுக்கு பாதிப்பு ஏற்படவாய்ப்பு

புதுடெல்லி: உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அரசு நிர்ணயித்துள்ள பட்ஜெட் இலக்குகளை எட்டுவதில் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஜூலையில், பருத்தி, சோயாபீன்ஸ், நெல் ஆகியவற்றுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிகரித்து அரசு அறிவித்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து விளைச்சல் அதிகமாகி சந்தையில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால், விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்ய அரசு கூடுதலாக செலவு செய்ய வேண்டி உள்ளது. இது மத்திய அரசுக்கு பெரும் சுமையாக மாறும் எனவும், அரசு நிர்ணயித்துள்ள பட்ஜெட் இலக்குகளை எட்டுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எஸ்பிஐ வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘குறிப்பாக கிராமப்புறங்களில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் பல்வேறு பொருளாதார பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்’’ என்றார். கடந்த பட்ஜெட்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவது தற்போது கடினமாகி உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Food Products, Budget Target, Damage
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...