×

உயர் வளர்ச்சி பாதையை தொடர முடிவுகளை விரைவாக எடுக்கும் வலுவான, தீர்க்கமான அரசு தேவை: நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

புதுடெல்லி: ‘‘இந்தியா தனது உயர் வளர்ச்சிப் பாதையை தொடர வேண்டுமெனில், மத்தியில் முடிவுகளை விரைவாக எடுக்கக் கூடிய வலுவான, தீர்க்கமான அரசு வேண்டும்’’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார். தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோசம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசியதாவது: இந்தியா தனது உயர் வளர்ச்சிப் பாதை, உயர் வருவாய், அதிக வளங்கள் தொடர வேண்டுமெனில், சிறந்த உள்கட்டமைப்பு குறிக்கோள்களை எட்ட வேண்டும். அதற்கு மத்தியில் விரைவாக முடிவுகளை எடுக்கக் கூடிய வலுவான தீர்க்கமான அரசு வேண்டும். ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவன விவகாரத்தை போன்ற நெருக்கடியான சமயங்களில் ஒரு பலவீனமான அரசால் தற்போதைய அரசைப் போன்று நடந்து கொண்டிருக்க முடியாது. அந்த நெருக்கடியான விஷயம் விரைவாக கையாளப்பட்டுள்ளது. (இந்திய உள்கட்டமைப்பு துறையின் முக்கிய நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ், கடன்களை திருப்பி செலுத்துவதிலும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது.

அதனால் அதன் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியும் பதவி விலகிய நிலையில், புதிய தலைவராக பிரபல வங்கியாளர் உதய் கோடாக்கை நியமித்து அரசு தனது வாரியத்தை நிறுவியது) செல்ல வேண்டிய பாதை குறித்த தெளிவான பார்வை கொண்ட அரசாங்கமும் தலைமையும்தான் இன்றைய இந்தியாவின் தேவை. அதற்கு மாறாக, கொள்கைகளை புரிந்துக் கொள்ள முடியாதவர்கள், பொருளாதார, அரசியல் திசைகளை உணர முடியாதவர்கள், இயல்பற்ற நிலையற்ற கூட்டணி ஆகியவை அல்ல. உலக பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு சிறப்பான இடத்தை சர்வதேச நிதியம் வழங்கியிருக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு அந்த இடத்தை நாம் தக்க வைத்திருக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால், வறுமையை விரட்டி விடலாம். வல்லரசாகி விடலாம். எனவே, பல்வேறு உத்திகளின் மூலம் அரசை கவிழ்க்க எண்ணுபவர்களை சார்ந்திராத வலுவான அரசு அமைய வேண்டும்.

தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை செயற்கை பற்றாக்குறையாலேயே உயர்ந்திருக்கிறது. இது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் எண்ணெய் தேவையில் 83 சதவீதம் இறக்குமதியையே நம்பியிருக்கிறோம். இந்த சவாலை நாம் எதிர்கொண்டே தீர வேண்டும். அதற்கான திறன் நம்மிடம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, அருண்ஜெட்லி நேற்று இரவு தனது பேஸ்புக் பதிவில், நிரவ்மோடியை தான் சந்தித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதில் உண்மையில்லை என்றும் நீரவ் மோடியை பார்த்ததே இல்லை என்றும் கூறி உள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Arun Jaitley , High growth path, Government need, Finance Minister Arun Jaitley
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்