என்ன பேசுகிறேன், செய்கிறேன் என்று தமிழக அமைச்சர்களுக்கு என் மீது முழு கவனம்: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: நான் என்ன பேசுகிறேன். என்ன செய்கிறேன் என்பதில் தமிழக அமைச்சர்கள் முழு கவனம் செலுத்துகின்றனர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். நேற்று மதியம் 12.30 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கமல்ஹாசன் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மீ  டூ புகாரில் இரு தரப்பையும் விசாரிக்க வேண்டும். உடனே யாரையும் குற்றம் சொல்லிவிட முடியாது. சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறையிலும் பாலியல் தொந்தரவு உள்ளது. சினிமா உலகில் நடப்பது மட்டுமே அதிக அளவில் தெரிகிறது. கம்யூனிஸ்டுகளை குருவாக ஏற்று அவர்கள் பாதையில் போவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ஆனால் என்னுடைய அரசியல் குரு, காந்திதான். அவர் கம்யூனிஸ்ட் என்றால், நானும் கம்யூனிஸ்ட் தான்.

 

 ‘தேவர் மகன் 2’ எனது கடைசி படம் என சொல்லிவிட முடியாது. அந்த படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக ‘தேவர்மகன் 2’ என்ற தலைப்பு அந்த படத்துக்கு இருக்காது. எல்லா ஜாதிகளுக்கும் எதிரானது எனது படம். கல்லூரி மாணவர்களுடன் நான் நடத்தும் உரையாடல் தமிழகத்தில் ஒரு அற்புதமான மாற்றத்தை கொண்டு வரக்கூடியது. அதை தமிழிசை உள்பட யாரும் தடுத்து நிறுத்த முடியாது.  தமிழக அமைச்சர்கள், தொடர்ச்சியாக என்னை விமர்சனம் செய்வது, எங்களுடைய முன்னேற்றத்துக்கான அடையாளம். நான் பேசுவதை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால்தான் தவறு. என்னை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். நான் என்ன பேசுகிறேன். என்ன செய்கிறேன் என அமைச்சர்கள் முழு கவனம் செலுத்துகின்றனர். அதோடு நான் பேசுவதற்கு, விமர்சனமும் செய்கின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது, நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதே அதற்கு அர்த்தம்.  அதே நேரத்தில் நமது நாட்டில், பெண்களுக்கு சம உரிமை இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவர்கள் கோயில்களுக்கு செல்வதை தடுப்பது அவர்களது சம உரிமைக்கு பாதிப்பாகும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: