×

12.70 கோடியில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: கடந்த ஜூன் மாதம் நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கல்வி மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வி ஆண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் அந்த  திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள திறன் அட்டையில் ‘கியூ ஆர் கோடு’ அல்லது ‘பார் கோடு’ மூலம் மாணவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொதுத் தொகுப்பில் இருந்து இணைய தளத்தின் மூலம் தகவல் பெறமுடியும். மாணவர்கள் வருகையை கண்காணிக்க முடியும். மாணவர்கள் இடைநிற்றல் துல்லியமாக கண்டறியப்படும்.

அதனால், 37358 தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவ மாணவியர்களுக்கும், அரசு உதவி பெறும்,பகுதி உதவி பெறும் 8386 பள்ளிகளில் படிக்கும் 23 லட்சத்து 99 ஆயிரம் மாணவ மாணவியர்கள் என மொத்தம் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 பேருக்கு திறன் அட்டை (ஸ்மார்ட் கார்டு )வழங்கப்பட வேண்டும். அதனால் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் டெண்டர் விடுத்து திறன் அட்டை தயாரிக்க தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கவும், இந்த திட்டத்துக்காக ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரம் நிதி அனுமதி அளித்தும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி  இயக்குநர் கேட்டுள்ளார்.

இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து  அதை ஏற்கலாம் என்று முடிவு செய்து 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவ மாணவியருக்கு திறன் அட்டைகள் வழங்கவும், திட்டத்தை செயல்படுத்த வசதியாக ரூ. 12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒப்புதல் வழங்கியும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநருக்கு அதிகாரம் வழங்கியும் ஆணையிடப்படுகிறது.  இவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Smart Card, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...