கோரிக்கைகளை ஏற்காவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை

சென்னை: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்காவிடில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ‘தமிழகத்தில் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது’ என்ற உயர் நீதிமன்ற உத்தரவையும், தண்ணீரை கனிமவள பிரிவில் இருந்து நீக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தியும், நேற்று முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை துரைப்பாக்கம், ரேடியல் சாலையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சங்கத் தலைவர் மேடவாக்கம் என்.நிஜலிங்கம் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். துரைப்பாக்கம், ரேடியல் சாலையில் அனைத்து தனியார் தண்ணீர் லாரிகளையும் நிறுத்தியுள்ளோம். பூந்தமல்லி, அம்பத்தூர், பல்லாவரம், மீஞ்சூர் உட்பட பல்வேறு இடங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீரை எடுப்பதை அரசு தடை செய்தால் 1.50 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். இதனால் அவர்களது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  

எங்களுக்கு நிரந்தரமாக நிலத்தடி நீரை எடுப்பதற்கு தமிழக அரசு உரிய ஆணை வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை எனில், இன்று (அக்.16) ஒரு நாள் காலை 7 மணி முதல் நாங்கள் அனைவரும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் பூந்தமல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை வருவாய்த்துறையினர் 130க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடினர். அவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: