×

தீபாவளி பட்டாசு கடைகள் அமைப்பதில் விதி மீறல் தீவுத்திடலில் பாதுகாப்பு ஏற்பாடு கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தீபாவளியையொட்டி தீவுத் திடலில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் 24ம் தேதிக்குள் அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சூளைமேட்டைச் சேர்ந்த எம்.முனியன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  கடந்த 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. பட்டாசு விற்பனைக்காக கடைகள் டெண்டர் விடப்படும். இதற்கான வழிமுறைகளை உருவாக்கி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2013 அக்டோபர் 7ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அதன் அடிப்படையில், தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கான டெண்டர் எடுத்தவர்கள் தற்காலிக கடைகளை அமைக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். கடைகள் தனித்தனியாக ஒரே வரிசையில் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தீப்பிடிக்காத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும். விபத்து ஏற்பட நேர்ந்தால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசர வழி, ஆம்புலன்ஸ் வசதி, முதல் உதவி கவுண்டர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள் அமைக்கப்பட உள்ள தீவுத் திடலின் மற்றொரு பக்கம் பொருட்காட்சி, ஓட்டல்கள் போன்றவைகள் உள்ளன. இந்த இடத்திற்கும் பட்டாசு விற்பனைக்காக ஒதுக்கப்படும் இடத்திற்கும் குறைந்தது 70 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

இதை தீயணைப்பு துறை அதிகாரிகளும், சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் ஒழுங்காக கடைபிடிக்காமல் பட்டாசு கடைக்கு சென்னை மாநகராட்சி, போலீசார், தீயணைப்பு துறை, சுற்றுலாத்துறை மற்றும் வெடிபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அனுமதி அளித்து வருகிறார்கள். இதனால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 19ம் தேதி முதல் 20 நாட்கள் தீவுத் திடலில் பட்டாசு கடைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் சட்ட விதிகளின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த கடந்த செப்டம்பர் 3ம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். எனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.விஜய் ஆனந்த், சிறப்பு அரசு வக்கீல் ஆர்.பால ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் 24ம் தேதிக்குள் அரசு பதில் தருமாறு உத்தரவிட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : firecracker stores ,Diwali ,High Court ,Government , Diwali crackers shops, government, high court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...