×

சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை

சென்னை: சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து டிபிஐ வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் மீது வழக்கு நடந்தது. அதனால் தேர்வு முடிவுகள் நிறுத்தி  வைக்கப்பட்டது.  கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு  முடிவுகளை வெளியிட்டது. ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி அடைந்திருந்த பலர் தற்போது தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சிறப்பு ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளின்படி விளையாட்டு ஆசிரியர்கள் தெர்வில் பெரும்பாலும் ஆண்களே தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதனால் பெண் ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த முறை வெளியான தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி அடைந்திருந்த பலர் இந்த முறை குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. பலர் தேர்ச்சி அடையவில்லை. மேலும், ஓவியப்பாடத்துக்கான தேர்வில் பலருக்கு தகுதியிழப்பின் காரணமாக பணி நியமனம் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற காரணங்களால் அந்த ஆசிரியர்கள் தேர்வு வாரிய தலைவரை சந்தித்து விளக்கம் கேட்கவேண்டும் என்று தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

ஓவியம் என்ற பாடத்துக்கு தமிழ் வழியில் தேர்வு எழுத தேவையில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அளித்த அறிவிப்பை அதிகாரிகளிடம் காட்டினர். அதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆலோசிப்பதாக தெரிவித்தனர். மேலும் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தவர்களும் விளக்கம் அளித்து பேசியதுடன் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்றும் வாதிட்டனர். அதுகுறித்தும் அதிகாரிகள் ஆலோசிப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று மாலை வரை சிறப்பு ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Teachers siege ,premises ,DPI , Featured Teacher Selection, DPI, Authors, Siege
× RELATED சென்னை டிபிஐ வளாகத்தில் இனி...