படிப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் கல்விச்சான்றிதழ்களை கேட்க முடியாது: நர்ஸ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உதவி தொகையின் அடிப்படையில் 2 ஆண்டுகள் பணியாற்ற மறுத்த நர்சின் கல்விச் சான்றிதழ்களை தர கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் வேலூர் சிஎம்சி கல்லூரியில் ஆஸ்டின் பிளஸ்சி என்பவர் நர்சிங் படிப்பில் சேர்ந்தார். அவர் படிப்பில் சேரும்போது, படிப்பை முடித்தவுடன் 2 ஆண்டுகள் செவிலியராக வேலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.  ஆனால், நர்சிங் படிப்பை முடித்த ஆஸ்டின் உயர் கல்வியை படிக்க முடிவு செய்தார். இதனால், 2 ஆண்டு செவிலியராக பணியாற்ற முடியாது என்றும், தன்னுடைய கல்விச் சான்றிதழை தரவேண்டும் என்றும் அவர் கல்லூரி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

அவரின் கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் ஏற்காததால் தனக்கு சான்றிதழ்களை வழங்க உத்தரவிடுமாறு ஏற்கனவே தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், “  நோயாளிகளின் உயிரை பாதுகாக்கவும், அவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டும் தொடர்ந்து ஓய்வில்லாமல் பணியாற்றுபவர்கள் நர்சுகள். இரக்கத்துடன், நேரம், காலம் பார்க்காமல் சேவை செய்யும் நர்சுகள் பணி சமுதாயத்தில் மிக அற்புதமான பணி என்று கருதப்படுகிறது. இந்த புனிதமான பணியைச் செய்ய மனுதாரர் மருத்துள்ளார்.

நிபந்தனைகளின்படி அவர் நர்சாக சேவை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. எனவே, நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் மனுதாரருக்கு கல்விச் சான்றிதழ்களை வழங்குமாறு கல்லூரிக்கு உத்தரவிட முடியாது. அவர் சான்றிதழையும் கேட்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: