×

நடிகர் திலீப் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார்: நடிகர் சங்க செயலாளர் பேட்டி

திருவனந்தபுரம்: நடிகர் திலீப் கடந்த 10ம் தேதியே நடிகர் சங்கத்திற்கு ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார் என்று மலையாள நடிகர் சங்க செயலாளர் நடிகர் சித்திக் கூறினார். பிரபல மலையாள இளம்நடிகை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொச்சியில் வைத்து காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதற்கு மலையாள முன்னணி நடிகைளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து நடிகை கீது மோகன்தாஸ், பாவனா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர்.

மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கம் சார்பில் நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மலையாள நடிகர் சங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  கடந்த 2 நாட்களுக்கு முன் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் ெகாச்சியில் பேட்டியளித்தனர். அப்போது நடிகர் சங்கத்திற்கு எதிராகவும் அதன் தலைவர் மோகன்லாலிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  நடிகர் சங்க செயலாளர் சித்திக் மற்றும் பழம் பெரும் நடிகை லலிதா  கொச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்கத்தை  அழிக்க வேண்டும் என்ற சதி திட்டத்துடன்தான் பெண் கலைஞர்கள் சங்கம் இல்லாத  குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய  குற்றவாளியான பல்சர் சுனில் குறித்து அவர்கள் இதுவரை ஒன்றும் கூறவில்லை.  

அவர்கள் திலீப்பை மட்டுமே குறி வைத்து தாக்கி வருகின்றனர். திலீப் கடந்த  10ம் தேதியே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார். இதை தெரிந்து கொண்டுதான்  பெண் கலைஞர் சங்கத்தினர் பேட்டியளித்துள்ளனர்.
இவ்வாறு சித்திக் மற்றும் லலிதா கூறினர். இதற்கிடையே, நள்ளிரவில் தன் வீட்டு கதவை தட்டி 17 வயது இளம் நடிகை பாதுகாப்பு கேட்டதாக நடிகை ரேவதி கூறியது குறித்து கொச்சியை சேர்ந்த சியாஸ் ஜமால் என்பவர், சிறுமிக்கு தொந்தரவு அளித்தவர்கள் மீதும் சம்பவம் அறிந்தும் புகார் அளிக்காத ரேவதி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி எர்ணாகுளம் மத்திய போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நடிகை ரேவதிக்கு எதிராக கேரள குழந்தைகள் உரிமை ஆணையத்திலும் நேற்று புகார் செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டை சேர்ந்த நவ்ஷாத் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dilip ,actor ,interview secretary , Actor Dilip, Resignation Letter, Secretary of Actors Association
× RELATED பெண்கள் பற்றி இழிவான பேச்சு பாஜ எம்பி,...