×

தகவல் உரிமை சட்டத்தில் மனு நேதாஜி உயிருடன் உள்ளாரா, இல்லையா? உறுதியான பதில் தர ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: நேதாஜி உயிருடன் இருக்கிறாரா அல்லது காலமாகி விட்டாரா என்பது பற்றி உறுதியான பதில் தர மத்திய அரசுக்கு தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) ஆர்வலர் அவ்தேஷ் குமார் சதுர்வேதி என்பவர், ‘‘கடந்த 2015, 2016ல் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் அஞ்சலி செலுத்தியது எதற்கு? நேதாஜி உயிருடன் இல்லையா’’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால், அவர் தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் பிறப்பித்த உத்தரவில், ‘‘மனுதாரர் கேட்ட தகவல்கள் கலாசார அமைச்சகத்தின் கீழ் வருவதால், சம்மந்தப்பட்ட அமைச்சகத்திற்கு மனுவை மாற்றுவதாக பிரதமர் அலுவலகம் கூறி இருக்கிறது.

பின்னர், நேதாஜி பற்றிய ஆவணங்கள் வெளியிடப்பட்டு அவை தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படுவதாக மனுதாரருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மனு தொடர்பாக தேசிய ஆவணக் காப்பகம் உறுதியான பதிலை அடுத்த 15 நாட்களுக்குள் தர வேண்டும்’’ என்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவரது பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் ஜனவரி 23ல் கொண்டாடப்படுகிறது. அவர் 1945ல் விமான விபத்தில் சிக்கியதாக கூறப்படும் நிலையில், அதன் பின் அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Netaji ,Commission , Information Rights Act, Netaji, Commission
× RELATED மதுரை நேதாஜி சாலையில் உள்துறை...