×

சொன்னதை செய்தாரா உங்கள் எம்.பி?

அழகிய  அகண்ட காவிரி ஆறு. அதன் பின்னணியில் மலைக்கோட்டை. இதை மையமாக ெகாண்டதே திருச்சி நாடாளுமன்ற தொகுதி. 2 மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய ‘கங்காரு’. இத்தொகுதி நாயகன் குமார். அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர். 2009ல்  தொடங்கி இன்று வரை இவர்தான் இத்தொகுதி மக்களின் காவலன். அதிமுகவை சேர்ந்தவர். ஒரே தொகுதியை 10 ஆண்டுகளாக கட்டியாளும் இவர், மலையளவு  சாதித்து இருக்கலாம். செய்தாரா? 2014 தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகள்  என்ன?

இசையோடு சேராத பாட்டு - இன்பமில்லை. பகுத்தறிவு இல்லாத பார்வை-பயனில்லை. சொல் ஒன்று; செயல் வேறு- இது, நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு. இதில், உங்கள் தொகுதி எம்பி. எப்படி? 2014 தேர்தலில் சொன்னதை செய்தாரா? தொகுதியை கவனித்தாரா? வளமாக்கினாரா? அல்லது தன்னை வளமாக்கினாரா? இதை பற்றி அலசுவதுதான் இந்த பகுதி. காரணம், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே பாக்கி. அதில், உங்கள் தொகுதியின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கப் போகும் சக்தி நீங்கள்தான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!’ இனி, முடிவு உங்கள் கையில்!

என்னை இத்தொகுதி எம்பி.யாக தேர்ந்தெடுத்தால்...
* நமது திருச்சியை தமிழகத்தின் 2வது தலைநகரமாக்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆசைப்பட்டார். அப்படிப்பட்ட திருச்சி மாநகரிலே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் இல்லை என்பது மிகப்பெரிய குறை. அதை அமைப்பேன்.
* ரூ80 கோடி மதிப்பீட்டிலே இழுபறியாக இருக்கும் ஜங்ஷன் ரயில்வே ஆக்டோபஸ் மேம்பாலம் அமைப்பேன். நிலுவை பணிகளை முடித்து
*  திருச்சி  விமான நிலையத்தின் ஓடுபாதையை ரூ930 கோடியிலே விரிவுப்படுத்த,  நிலம் கையகப்படுத்தும் பணி ஜவ்வாக இழுக்கிறது. அதை முடித்து காட்டுவேன்.   
* நாற்றம் பிடித்த அரியமங்கலம் குப்பை கிடங்கை ரூ40 கோடி செலவிலே வேறு இடத்திற்கு மாற்றுவேன்.
* பாதாள சாக்கடை அமைப்பேன். அதிலே, சாக்கடை நீரை தடையின்றி ஓட வைப்பேன்.
 
* திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையிலே அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலே சர்வீஸ் ரோடுஅமைப்பேன்.
* கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதியில் முந்திரிதொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்க்கையை வளமாக்க, இங்கு முந்திரி தொழிற்சாலை  அமைப்பேன்.
* அடுத்ததாக, நமது புதுக்கோட்டை பேரவை தொகுதிக்குட்பட்ட கறம்பக்குடி ஒன்றிய பகுதிகளில் மரவள்ளிக்  கிழங்கு  உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலே, இங்கு ஜவ்வரிசி  தொழிற்சாலை  அமைப்பேன்.
* தஞ்சாவூரில்   இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு ரயில் விட்டால், திருச்சி மக்கள் பயன்பெறுவார்கள். அதற்கு நடவடிக்கை  எடுப்பேன்.
- எனவே, என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெறச் செய்வீர். வெற்றி பெற செய்வீர்... மறவாதீர்... மறந்தும் இருந்து விடாதீர் என கூறி விடை பெறுகிறேன். நன்றி... வணக்கம்!

என்ன சொல்கிறார் குமார்?
* திருச்சி பன்னாட்டு  விமான நிலையத்தை ரூ930 கோடியில் மாநிலத்தின் மிகப்பெரிய விமான நிலையமாக விரிவாக்கம் செய்ய, விமான நிலைய ஆலோசனை  குழு தலைவர் என்ற முறையில் பல முயற்சிகளை எடுத்துள்ளேன்.
* திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய  நடை மேம்பாலம் அமைக்க ஏற்பாடு  செய்துள்ளேன்.
* அரிஸ்டோ மேம்பால பணியை விரைவாக முடிக்க, சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.

* திருச்சியில்  ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
* கள்ளிக்குடி மார்க்கெட் மீண்டும் செயல்பட நடவடிக்கை  எடுத்துள்ளேன்.
* விமான நிலையம், அரிஸ்டோ மேம்பால பணி நடைபெறும்  இடத்தில் ராணுவ நிலம் உள்ளதால் அதற்கு பதிலாக மாற்று இடம் பெற, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஹாய்... ஐயம் குமார்!
பெயர்: குமார். தொழில்: அரசியல்: பதவி: திருச்சி மாநகர அதிமுக மாவட்ட செயலாளர். படிப்பு: பிஎஸ்சி, பிஎல். பிறந்த தேதி 21.04.1971.  பிறந்த ஊர்:  புனல்குளம் கிராமம்  (புதுக்கோட்டை மாவட்டம்). தந்தை:  பழனிவேல். தாய்: முனியம்மாள். மனைவி: காயத்ரி. மகன்: முகேஷ். மகள்: ஷிவானி.

பாழானது ரூ77 கோடி
திருச்சியின் கொத்தவால் சாவடியான  காந்தி மார்க்கெட்ைட கள்ளிக்குடிக்கு  மாற்றுவது ஜெயலலிதாவின் கனவு திட்டம். ஆனால், புறா கூண்டு போல் கடைகளை கட்டி  அறைகுறையாக நிறைவேற்றப்பட்டதால்  திறப்பு விழாவுக்கு கூட வியாபாரிகள் செல்லவில்லை. இதனால், ரூ77 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம்  யாருக்கும் பயனின்றி பாழடைந்து வருகிறது.

கை நழுவும் திட்டம்
அரசு மருத்துவமனையை  பிரதம மந்திரி மருத்துவ விரிவாக்க திட்டத்தின் கீழ் தரம் உயர்த்த  திருச்சி  தேர்வாகியும், கடைசியில் கை நழுவியது.  2வது முறையாக அதிமுக ஆட்சி  நடக்கிறது. திருச்சி தொகுதியில் 2 அமைச்சர்கள் உள்ளனர். 2வது முறையாக  அதிமுக எம்பி.யாக குமார் உள்ளார். ஆனால், இதற்காக இதுவரை யாருமே எந்தவித  முயற்சியும் எடுக்கவில்லை என்கின்றனர் மக்கள்.

தத்து கிராமம்; சொத்தை கிராமம்
திருவெறும்பூர்  தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியை குமார் தத்தெடுத்தார்.  மெயின்ரோடு வசதிகள் புதுப்பித்து கொடுத்து இருந்தாலும், பழங்கனாங்குடியில்  உள்ள ரேஷன் கடை பழுதடைந்துள்ளது. இடிந்து விழுந்த கால்நடை மருத்துவமனை சீரமைக்கப்படவில்லை. பழங்கனாங்குடியில் உள்ள முத்துமாரியம்மன்  கோயில் 7 கிராமங்களுக்கு பொதுவான கோயிலாகும். அங்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கு கூடம் கட்டித் தரவில்லை. விவசாய  நிலங்களுக்கு செல்லும் குளத்துகரை சாலை அமைக்கவில்லை. பூலாங்குடி காலனியில்  இருந்து பழங்கனாங்குடி செல்லும் சாலையின் குறுக்கேதான் திருச்சி அரை  வட்டசாலை செல்வதால் மேம்பாலம் கட்டவில்லை.

ரயில்வே பாலம் பணால்
புதுக்கோட்டை  நகரில் உள்ள திருவப்பூர், கருவேப்பிலான் ரயில்வே மேம்பாலம், திருவப்பூர்  ரயில்வே கேட், கருவேப்பிலான் ரயில்வே கேட் பகுதிகளில் ரயில் வரும்போது  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்த இடங்களில் ரயில்வே  மேம்பாலம் அமைப்பதாக சொன்னார். அது, இன்னும் சொல்லாகவே இருக்கிறது.

கோபுர விளக்குகள் ‘டெட்’
புதுக்கோட்டை  நகரத்தில் புதிய பேருந்து நிலையம் உட்பட சில இடங்களில் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் கோபுர மின்  விளக்குகள் அமைத்தார். இவை பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே பழுதாகி, பரிதாபமாக கிடக்கிறது.  கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை பேரவை தொகுதிகளில் மக்கள்  நலத்திட்டங்கள் கோட்டை விடப்பட்டுள்ளது.

பூர்வீகத்தை மறந்தவர்
2009, 2014 தேர்தல்களில் 2 முறையும் வெற்றி பெற்று குமார் எம்பி.யாக உள்ளார். புதுக்கோட்டைதான் இவருடைய பூர்வீகம். ஆனால், மாவட்டத்துக்கு அவர் எந்த  திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

ரூ25 கோடியில் 87% காலி
எம்பி.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டுக்கு ரூ5 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி,  எம்பி குமாருக்கு திருச்சி தொகுதிக்காக 5 ஆண்டுகளில் ரூ25 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், வளர்ச்சி திட்டங்களுக்காக இதுவரை 87.64 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது.  மீதி ரூ4.02 கோடி கையிருப்பில் உள்ளது.

நதிகள் இணைப்பு அம்போ
காவிரி  - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தின் கதி, இதுவரை விடை தெரியாமல்  இருக்கிறது. மத்திய அரசிடம் நிதி பெற்று இத்திட்டத்தை  செயல்படுத்தினால், புதுக்கோட்டை, கந்தர்வ கோட்டை பேரவை தொகுதிகள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  பயனடையும். இதனால், இதை விரைந்து செயல்படுத்த வேண்டும், ஆனால், இதை செயல்படுத்த ஒரு முயற்சியும் எடுக்காமல் கிடக்கிறார் குமார் என்று குமுறுகின்றனர் மக்கள்.

கலக்கல் காமெடி... சம்பவம் -1
கடந்த மார்ச் 28ம் தேதி மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன், ‘காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பி.க்களை ராஜினாமா  செய்ய கூறுகின்றனர். நாங்கள் தற்கொலை செய்து கொள்ள கூட தயாராக உள்ளோம்’ என்று ஆவேசமாக பேசினார். குமாரிடம் கேட்டபோது, ‘தற்கொலை செய்வோம் என்பது நவநீதகிருஷ்ணனின் சொந்த கருத்து. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்’ என்றார் கூலாக.

சம்பவம் - 2
அதிமுக உடைந்த பிறகு அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து குமாரை கடந்தாண்டு நீக்கினார் தினகரன். அப்போது பேட்டியளித்த குமார்,  ‘தினகரனுக்கு தைரியம் இருந்தால் எடப்பாடியின் பதவியை பறித்து பார்க்கட்டும்’ என்று சவால் விட்டார். உடனே, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை தினகரன் நீக்கினார். ‘அவர் மேல கைய வெச்சிருவியா’ என வடிவேலு பட காமெடி போல், எடப்பாடியின் கட்சி பொறுப்பு பறிபோக காரணமாக இருந்தார் குமார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Did you say, MP?
× RELATED தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100...