×

விஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் ஐதராபாத்: ஜார்க்கண்ட் முன்னேற்றம்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட ஐதராபாத் அணி தகுதி பெற்றது.பரபரப்பான 4வது மற்றும் கடைசி கால் இறுதியில் ஆந்திரா - ஐதராபாத் அணிகள் நேற்று மோதின. பெங்களூர், ஜஸ்ட் கிரிக்கெட் அகடமி  மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆந்திரா அணி முதலில் பந்துவீசியது. ஐதராபாத் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 281  ரன் குவித்தது. சந்தீப் அதிகபட்சமாக 96 ரன் (97 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். அகர்வால் 31, கேப்டன் அம்பாதி ராயுடு 28, சுமந்த் 27, ரோகித் 21,  பண்டாரி 19, அக்‌ஷத் ரெட்டி 18, மிலிந்த் 15 ரன் எடுத்தனர். ஆந்திர பந்துவீச்சில் ஐயப்பா, கிரிநாத், பிரித்வி ராஜ் தலா 2, சசிகாந்த் 1 விக்கெட்  வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆந்திரா களமிறங்கியது.தொடக்க வீரர்கள் பாரத் 12, ஹெப்பார் 38 ரன்னில் பெவிலியன் திரும்ப, கேப்டன் ஹனுமா விஹாரி - ரிக்கி புயி ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன்  விளையாடி ரன் குவித்தது. இருவரும் அதிரடியாக அரை சதம் அடித்து அசத்தினர். இவர்களின் அபாரமான ஆட்டத்தால் ஆந்திரா மிக எளிதாக  வெற்றியை வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது சிராஜ் அடுதடுத்து இருவரையும் வெளியேற்றி ஐதராபாத் அணிக்கு நம்பிக்கை  அளித்தார்.ரிக்கி புயி 52 ரன் (71 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஹனுமா விஹாரி 95 ரன் (99 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள்  பதற்றத்துடன் விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஆந்திரா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன் எடுத்து 14 ரன் வித்தியாசத்தில்  தோல்வியைத் தழுவியது. சசிகாந்த் 20, பிரித்வி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் சிராஜ் 3, ரவி கிரண் 2, மிலிந்த், சந்தீப்  தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கடுமையாகப் போராடி த்ரில் வெற்றியை வசப்படுத்திய ஐதராபாத் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

மகாராஷ்டிரா அணியுடன் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 3வது கால் இறுதியில் ஜார்க்கண்ட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று  அரை இறுதிக்கு தகுதி பெற்றது. டாசில் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பந்துவீச, மகாராஷ்டிரா 42.2 ஓவரில் 181 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (குகாலே 22,  மோத்வாவி 52, கேப்டன் திரிபாதி 47). ஜார்க்கண்ட் பந்துவீச்சில் அங்குல் ராய் 4, சுக்லா 3, ஆரோன் 2, நதீம் 1 விக்கெட் வீழ்த்தினர்.மழை காரணமாக ஆட்டம் தடைபட்டதால் 34 ஓவரில் 127 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் அணி 32.2  ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. ஆனந்த் சிங் 12, கேப்டன் இஷான் கிஷண் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஷாஷீன் ரத்தோர் 53  ரன், சவுரவ் திவாரி 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  பெங்களூருவில் நாளை நடக்க உள்ள முதல் அரை இறுதியில் மும்பை -  ஐதராபாத் அணிகளும், நாளை மறுநாள் 2வது அரை இறுதியில் ஜார்க்கண்ட் - டெல்லி அணிகளும் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay Hazare Trophy ,Hyderabad Hyderabad ,Jharkhand , Vijay Hazare,Trophy wins,Hyderabad Hyderabad,Jharkhand's progress
× RELATED ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை...