×

6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் 11 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்’: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா சென்னை எம்ஜிஆர் நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் கலந்து  கொண்டு 424 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். பின்னர் அந்த பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ‘அடல் டிங்கரிங் லேப்’ திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய அளவில் பார்க்கிற போது  தமிழகத்தில் தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, கல்விக்காக அதிகம் செய்வதால் தான் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இடை நிற்றல் என்பது இந்திய  அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் 0.88 சதவீதம் தான் உள்ளது. இது ரொம்ப குறைவு.

இந்நிலையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற 11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ‘டேப்’ வழங்கப்படும். அதை கொண்டு கல்வி சம்பந்தமான விஷயங்களை மாணவர்கள்  அறிந்து கொள்ள முடியும். மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான ‘அடல் டிங்கரிங் லேப்’ திட்டத்தில் 675 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் இந்த ‘அடல் டிங்கரிங் லேப்’ தொடங்கப்படும். முழுக்க முழுக்க பொறியியல் கல்வியை சார்ந்தது இந்த லேப். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், ரோபோடிக் தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்காக மத்திய அரசு ரூ.272  கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. விரைவில் மத்திய அரசு அனுமதி கொடுத்த உடன் 675 பள்ளிகளில் இந்த லேப் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியர் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும். முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் போரூரில் உள்ள அரசு பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பயோமெட்ரிக் கருவி மாணவிகள் அதிகம் உள்ள உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் பொருத்தப்பட்டு, அவர்களது வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.  கடந்த ஆண்டு போதிய அவகாசம் இல்லாத நிலையில், தனியார் கல்லூரியில் 3,109 பேருக்கு பயிற்சி அளித்தும், மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் 12 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் கல்வி ஆண்டில் 1000 மாணவ,  மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு செல்லும் வகையில் 6 வார கால பயிற்சி அளிக்கப்படும். அதே போன்று சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் ஓரிரு நாட்களில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister ,Chengottai Announcement , Students, Tape, Minister Chengottai
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...