×

காலாவதி உயிர் உரம் வினியோகம்: நெற்பயிர் வளர்ச்சி பாதிக்கும்?

அறந்தாங்கி: நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ரசாயன உரமிடுவதை தவிர்த்து, உயிர்உரங்களை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறுவதற்காக தமிழக அரசின் வேளாண்மைத்துறை அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உரங்களை விவசாயிகள் பயன்படுத்த பரிந்துரை செய்து வருகிறது.  இதனால் வேளாண்மைத்துறையினர் வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு விதை வாங்க வரும்போது, விதையுடன் உயிர்உரங்களான அசோஸ்பைரில்லம்,

பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை கட்டாயப்படுத்தி வழங்கி வருகின்றனர். தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவிரி பாசனப் பகுதியில் நேரடி நெல் விதைப்பு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல் விதைப்பிற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விதை நெல்களை மானிய விலையில் வாங்கி வருகின்றனர். ஒரு விவசாயிக்கு தலா 40 கிலோ என்ற அளவில் மானிய விலையில் விதை நெல் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் டீலக்ஸ் பொன்னி எனப்படும் பிபிடி5204 என்ற விதை நெல், 40 கிலோவிற்கு அரை லிட்டர் திரவ அசோஸ்பைரில்லமும், டி.கே.எம்13 என்ற விதைநெல் 40 கிலோவிற்கு 1 லிட்டர் திரவ அசோஸ்பைரில்லமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மணமேல்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில்  விதை நெல்லுடன் வழங்கப்படும் திரவ அசோஸ்பைரில்லம் இந்த மாதத்துடன் காலாவதியாகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தயார் செய்யப்பட்ட இந்த திரவ அசோஸ்பைரில்லத்தின் ஆயுள்காலம் இம்மாதம் வரை மட்டுமே உள்ளது.தற்போது நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள் தங்கள் வயலில் தண்ணீர் இல்லாததால், பயிர் முளைத்த பின்பு அடுத்த மாதம் மத்தியில்தான் அசோஸ்பைரில்லம் தெளிக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்த மாதம் பயிருக்கு அசோஸ்பைரில்லம் தெளிக்க உள்ள நிலையில் இந்த மாதத்துடன் அசோஸ்பைரில்லம் காலாவதி ஆக உள்ளதால், விவசாயிகள் பயிருக்கு மருந்து தெளிக்கும்போது, எதிர்வினை ஏற்பட்டு பயிர்வளர்ச்சி பாதிக்கும் நிலை உள்ளது.  வேளாண்மைத்துறையினர்விவசாயிகளுக்கு தரமான, காலாவதியாகாத  மருந்துகளையும்,  விதைகளையும் வினியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

அதேசமயம், ‘அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்கள் 9 மாதகாலத்திற்கு முழு வீரியத்துடன் இருக்கும். கடந்த ஆண்டு எங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட உயிர் உரங்கள் விற்பனை ஆகாமல் குடோன்களில் உள்ளன. அந்த

மருந்தைகளை நாங்கள் திருப்பி அனுப்பாமல் எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறுவதால், நாங்கள் வேறு வழியின்றி விதை நெல்லுடன் திரவ அசோஸ்பைரில்லம் உள்ளிட்ட உரங்களை விற்பனை

செய்து வருகிறோம்’ என வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறினர்.

கடந்தாண்டு விற்பனையாகாத அசோஸ்பைரில்லம்: அறந்தாங்கி விவசாயிகள் கூறியதாவது: நாங்கள் விதை வாங்கும்போது,  கட்டாயப்படுத்தி திரவ அசோஸ்பைரில்லம் தருகின்றனர்.  இந்த மருந்து கடந்த  ஆண்டு மணமேல்குடி டெப்போவிற்கு வந்தது. கடந்த ஆண்டு இப்பகுதியில் மழை  பெய்யாததாலும், போதிய அளவு காவிரி நீர் வராததாலும், விவசாயம்  பாதிக்கப்பட்டதால், விதையும், அசோஸ்பைரில்லமும், விற்பனை ஆகாமல்  தேங்கியது. தேங்கிய மருந்தை வேளாண்மை துறையினர் திருப்பி அனுப்பாமல், மேல்  அதிகாரிகளுக்கு பயந்து, தற்போது விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தில் இந்த  ஆண்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மணமேல்குடி உள்ளிட்ட வேளாண்மை  விரிவாக்க மையங்களில் இந்த மாதத்துடன் காலாவதி ஆக உள்ள திரவ  அசோஸ்பைரில்லத்தை விற்பனை செய்து வருகின்றனர் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Paddy Development , Bio-fertilizer, distribution and paddy development
× RELATED புதுச்சேரியில் கோடை விடுமுறை...