×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி விரைவில் அடிக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திருச்சி: திருச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கூறியதாவது: திருச்சி அரசு மருத்துவமனையில் நவீன ஸ்கேன் மையம் திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் இன்னும் 18 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுவருகிறது.   சிடி ஸ்கேன் மையம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.  திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள  தாய் எனப்படும் விபத்து மற்றும் அவசர சிறப்பு சிகிச்சை வார்டில் 11 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடன் உள்ளன. ஆஸ்திரேலியா  நாட்டின் மருத்துவமனைகளில் இருப்பது போல் இந்த பிரிவு செயல்படும்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்  இன்னும் ஓரிரு மாதங்களில் ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோபிளாஸ்டிக் போன்ற இதய சிகிச்சைக்கான  கேத்லேப் பிரிவு தொடங்கப்படும். இதேபோல் 12 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால் விபத்து இறப்பு கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் குறைந்துள்ளது. ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. நோய் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் மருத்துவர் குடும்பத்தில் 4 பேருக்கும், திருச்சியில் ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒசட்டாமின் மாத்திரை 12 லட்சம் அளவில் தமிழக சுகாதாரத்துறையில் இருப்பு உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த வித தாமதமும் இன்றி அனைத்து பணிகளும் முறையாக நடந்து வருகின்றன. இதற்காக ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். எனவே விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.

தமிழகத்தில் விபத்து நடந்தால், அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடங்களாக உள்ளது. இந்த நேரத்தை குறைக்கவும், ஆம்புலன்ஸ் திட்டத்தை மேம்படுத்தவும் ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசவத்தில் பெண்கள் இறப்பு 64 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக குறைந்துள்ளது. 21,000 டாக்டர், செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் டாக்டர், செவிலியர் 1,800 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் 772 லேப் டெக்னீஷியன்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Minister Wijepabaskar ,hospital ,Madurai AIIMS , Madurai Aries Hospital, Prime Minister Modi, Foundation, Minister Vijayapaskar
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...