தமிழகம் மற்றும் பாகிஸ்தானை ஒப்பிட்டு பேசிய சித்துவுக்கு வலுக்கும் கண்டனங்கள் : காங்., விளக்கம் அளிக்க கோரிக்கை

டெல்லி: தமிழகம் மற்றும் பாகிஸ்தானை ஒப்பிட்டு பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான சித்துவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பஞ்சாப் அமைச்சர் சித்துவின் பேச்சு சர்ச்சையோடு விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இலக்கிய திருவிழா ஒன்றில் பங்கேற்று பேசிய சித்து, தமிழகத்தின் கலாச்சாரத்தையும் பாகிஸ்தான் நாட்டின் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு பேச அது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தின் கலாச்சாரம், மொழி, உணவுகள் ஆகியவை தனக்கு ஒத்து வராது என்றும் தம்மால் அதனை கடைபிடிப்பது கடினம் என்றும் பேசியுள்ளார். தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் பாகிஸ்தானின் கலாச்சாரம் அவருடன் நன்கு ஒத்துப் போவதாக தெரிவித்துள்ளார். அதாவது தென்னிந்தியாவில் பேசும் மொழிகள் புரியவில்லையென்றும், பாகிஸ்தானில் மக்கள் ஆங்கிலம் மற்றும் பாஞ்சாபி பேசுவதால் பாகிஸ்தான் மக்களிடம் உரையாடுவதற்கு எளிதாக இருக்கிறது. அந்நாட்டு உணவு பழக்கவழக்கங்களும் ஒத்து போவதாக கூறினார்.

மேற்கண்டவாறு பேசியுள்ள சித்துவின் பேச்சு வடஇந்தியா, தென்னிந்தியா என்ற பிரிவினையாக மாறி விவாத பொருளாக தற்போது மாறியுள்ளது. இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, தற்போது இவ்விவகாரத்தை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஆயுதமாக மாற்றியுள்ளது பாரதிய ஜனதா. தமிழகத்தை குறிப்பிட்டு தமிழ் மொழியையும், தமிழகத்தையும் இழித்து பழித்து பேசியுள்ள காங்கிரஸ் அமைச்சர் சித்துவை கண்டிப்பதாக தமிழிசை கூறியுள்ளார். இதற்கு ஒருபடி மேலாக சென்று இந்தியாவை வடஇந்தியா, தென்னிந்தியா என பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா. சித்து என்ற மாநில கட்சி அமைச்சரின் கருத்தை, ஒரு தேசிய கட்சியின் கருத்தாக எடுத்து கொள்ளப்பட வேண்டியதா என்பதை பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விளக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்தியா என்ற பன்முக தேசத்தை ஒற்றை நாடாக கட்டமைக்க போராடிய காங்கிரஸின் தேசிய தலைமை, இந்த விவகாரத்தில் உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: