×

விஜய் ஹசாரே டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது மும்பை: கம்பீர் சதத்தில் டெல்லி தகுதி

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட மும்பை அணி தகுதி பெற்றது. முதலாவது கால் இறுதியில் பீகார் - மும்பை அணிகள் நேற்று மோதின. பெங்களூர், ஜஸ்ட் கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. பீகார் அணி 28.2 ஓவரில் 69 ரன் மட்டுமே எடுத்து பரிதாபமாக ஆல் அவுட்டானது. பபுல் குமார் 16, ரகமதுல்லா 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். மும்பை பந்துவீச்சில் துஷார் பாண்டே 5 விக்கெட் (9-1-23-5), முலானி 3, ஷ்ரேயாஸ் அய்யர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 12.3 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன் எடுத்து மிக எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஹெர்வாத்கர் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ரோகித் ஷர்மா 33 ரன் (43 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஆதித்யா தாரே 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அரியானா ஏமாற்றம்: எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 2வது கால் இறுதியில் டெல்லி - அரியானா அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த அரியானா 49.1 ஓவரில் 229 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
சைதன்ய பிஷ்னோய் 85 ரன் (117 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), பிரமோத் சாண்டிலா 59 ரன் விளாச, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். டெல்லி பந்துவீச்சில் கெஜ்ரோலியா 6 விக்கெட் (10-2-31-6), சாய்னி 3, லலித் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 230 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டெல்லி அணி, 39.2 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்து அபாரமாக வென்றது. கேப்டன் கவுதம் கம்பீர் 104 ரன் (72 பந்து, 16 பவுண்டரி), ஷோரி 50, ராணா 37 ரன் விளாசி வெற்றிக்கு உதவினர். பெங்களூருவில் இன்று நடைபெறும் 3வது மற்றும் 4வது கால் இறுதி ஆட்டங்களில் மகாராஷ்டிரா - ஜார்க்கண்ட், ஆந்திரா - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : semi-finals ,Vijay Hazare Trophy ,Mumbai ,Gambhir ,Delhi , Vijay Hazare Trophy, Mumbai, Gambhir, Delhi,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...